

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் சதம் விளாசினார். இஷான் கிஷன் அரைசதம் பதிவு செய்தார்.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது போட்டி தற்போது ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் களம் இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 30 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து தவானும் 40 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கில் மற்றும் இஷான் கிஷன் இணைந்து 140 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணிக்கு அது மிகவும் முக்கியமான பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. கிஷன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹூடாவும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதி ஓவரின் முதல் பந்து வரை அவர் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 97 பந்துகளில் 130 ரன்கள் குவித்திருந்தார். இதில் 15 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
சஞ்சு சாம்சன், அக்சர் படேல், தாக்கூர் போன்ற வீரர்கள் மிக விரைவில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்தது.
ஜிம்பாப்வே அணிக்காக பிராட் எவன்ஸ் சிறப்பாக பந்து வீசி இருந்தார். 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அவர். தற்போது அந்த அணி 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.