Published : 16 Oct 2016 10:20 AM
Last Updated : 16 Oct 2016 10:20 AM

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்: நெருக்கடியுடன் களமிறங்குகிறார் தோனி

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றிய உற்சாகத்தில் அந்த அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி மோதுகிறது.

விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த 4 நாட்களில் குறுகிய வடிவிலான ஆட்டத்தை தோனி தலைமையில் இந்திய அணி எதிர்கொள்கிறது.

டெஸ்ட் தொடரில் கேப்டனாக கோலி அசத்தியுள்ளதால் ஒருநாள் போட்டி தொடர் ஒருவகையில் தோனிக்கு நெருக்கடியாக இருக்கக்கூடும். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றும் பட்சத்தில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறக்கூடும். தற்போது இந்திய அணி 110 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூஸிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

நியூஸிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை வென்றதில்லை. அந்த அணி 1988, 1995, 1999 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடர்களில் படுதோல்விகளை சந்தித்துள்ளது. கடைசியாக 2010-ல் கவுதம் காம்பீர் தலைமையிலான இந்திய அணி 5-0 என நியூஸிலாந்தை வீழ்த்தியிருந்தது.

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் தோனி இந்த தொடரை சந்திக்கிறார். அவர் கடைசியாக 2015-ம் ஆண்டு அக்டோபரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றிருந்தார். அந்த ஆட்டத்தில் அவர் 92 ரன்கள் எடுத்திருந்தார்.

இரு அணிகளும் இதுவரை 93 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 46 ஆட்டத்திலும், நியூஸிலாந்து 41 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவில்லாமல் போனது. ஒரு ஆட்டம் டையில் முடிவடைந்தது. கடைசியாக இரு அணிகளும் மோதிய 5 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது. ஒரு ஆட்டம் டை ஆகியிருந்தது.

தற்போதைய தொடரில் அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னணி பந்து வீச்சாளர்களான இவர்கள் இல்லாமல் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை கைப்பற்றுவது தோனிக்கு சற்று சவாலான விஷயம்தான். அதிலும் அஸ்வின் டெஸ்ட் தொடரில் 27 விக்கெட்கள் வீழ்த்தி நல்ல பார்மில் இருந்த நிலையில் அவர் இல்லாதது தோனிக்கு சற்று சிரமமே.

இளம் வீரர்களான ஜெயந்த் யாதவ், அக் ஷர் படேல் ஆகியோருடன் அமித் மிஸ்ராவை நம்பியே சுழற்பந்து வீச்சு உள்ளது. வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ் பலம் சேர்க்கக்கூடும். மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பேட்டிங்கில் ஷிகர் தவண் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாத நிலையில் மற்றொரு முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இதனால் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரை நம்பியே பேட்டிங் உள்ளது. தொடக்க வீரர்களாக அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கக்கூடும்.

நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் ஒருநாள் போட்டியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி, அதிரடி பேட்ஸ்மேன் கோரே ஆண்டர்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் 135 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள சவுத்தி, காயம் காரணமாக இந்த ஆண்டில் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டிருந்த அவர் கடைசி நேரத்தில் கணுக்கால் காயம் காரணமாக விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சன், நியூஸிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள வீரர் ஆவார். அவரது வருகை அணிக்கு புது பலத்தை கொடுக்கக்கூடும். மேலும் டெஸ்ட் தொடரில் சொதப்பிய மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர் ஆகியோர் ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.

சவுத்தி, டிரென்ட் போல்ட் வேகப்பந்து வீச்சு கூட்டணி எத்தகைய பேட்டிங் வரிசைக்கும் சவால் அளிக்கக்கூடியது. இவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுப்பார்கள். இதே போல் சுழற்பந்து வீச்சில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி பலம் சேர்க்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x