

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் விராட் கோலி - ரஹானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 365 ரன்க ளைக் குவித்து புதிய சாதனை படைத்தது.
இந்தியா - நியூஸிலாந்து அணி களுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களை எடுத்திருந் தது. விராட் கோலி 103 ரன்களு டனும், ரஹானே 79 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்த இந்த ஜோடி நியூஸிலாந்தின் பந்துவீச்சை உறுதியாக எதிர்கொள்ளத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத் தில் 79 ரன்களை எடுத்திருந்த ரஹானே, நேற்று 210 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்தை எட்டிய பிறகு அவரது ஆட்டத்தில் இன்னும் வேகம் கூடியது. சிக்சர்களும் பவுண்டரி களுமாக விளாசித் தள்ளிய அவர், நியூஸிலாந்து அணிக்கு பெரும் தலைவலியாக மாறினார்.
மறுபுறம் கேப்டன் விராட் கோலியும் ரன் வேகத்தைக் கூட்ட, நியூஸிலாந்து அணி இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தது. இந்த இக்கட்டில் இருந்து யாராவது அணியை மீட்க மாட்டார்களா என்ற நப்பாசையில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம் சன் பந்துவீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவருக்குக் கைகொடுக் கவே இல்லை. மேற்கொண்டு விக்கெட்டை இழக்காமல் ஆடிய இந்திய அணி உணவு இடைவேளை யின் போது 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு 150 ரன்களை கடந்த விராட் கோலி, மேலும் உறுதியாக மட்டை யைச் சுழற்றினார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் ரன்களைக் குவிக்காததற்கு ஈடுசெய்யும் வகையில் நேற்று அவரது பேட்டிங் இருந்தது. 347 பந்துகளில் 200 ரன்களை எடுத்த அவர், தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் ரஹானேவும் அவருக்கு ஈடுகொடுத்து ஆட இந்தியாவின் ஸ்கோர் மளமள வென்று உயர்ந்தது.
இந்திய அணியின் ஸ்கோர் 465- ஆக இருந்தபோது ஜீதன் படேலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி விராட் கோலி ஆட்டமிழந்தார்.
இந்த இன்னிங்ஸில் 366 பந்துகளை சந்தித்த அவர் 211 ரன்களைச் சேர்த்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் மேற் கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக எடுத்த 200 ரன்களே அவரது அதி கபட்ச ஸ்கோராக இருந்தது.
கோலி - ரஹானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 365 ரன்களைச் சேர்த்தது. இது இந்திய அளவில் புதிய சாதனையாகும். இதற்கு முன்னர் டெண்டுல்கர் - வி.வி.எஸ். லட்சுமண் ஜோடி 4-வது விக்கெட் டுக்கு 353 ரன்களைக் குவித்ததே சாதனையாக இருந்தது.
விராட் கோலி அவுட் ஆனதைத் தொடர்ந்து ரஹானேவுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 39 ரன்களைச் சேர்த்த நிலையில் போல்டின் பந்தில் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து ரஹானே அவுட் ஆனார். அவர் 381 பந்துகளில் 18 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 188 ரன்களைச் சேர்த்தார். இது டெஸ்ட் போட்டி களில் ரஹானே எடுத்த அதிக பட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2014-ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 147 ரன்களைச் சேர்த்ததே அவரது அதிகபட்சஸ் கோராக இருந்தது.
ரஹானேவின் விக்கெட் விழுந் ததைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் ரன்ரேட்டை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்களாக இருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய் வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். அப்போது ரோஹித் சர்மா 51 ரன்களுடனும், ஜடேஜா 17 ரன்களுடனும் ஆடிக்கொண்டி ருந்தனர்.
இந்தியாவைத் தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்ஸை ஆட வந்த நியூஸிலாந்து அணி நேற்று ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத் திருந்தது. குப்தில் 17 ரன்களு டனும், லதாம் 6 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்தூர் டெஸ்ட் போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு 365 ரன்களைக் குவித்து சாதனை படைத்த விராட் கோலி - ரஹானே ஜோடி.
இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம்
இந்தூர் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய வீரர் ஜடேஜா, பிட்ச்சின் மீது ஓட, அவரை நடுவர் எச்சரித்தார். இதன் பிறகும் 2-வது முறையாக அவர் பிட்ச்சின் மீது ஓடியதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ரன்கள் நியூஸிலாந்து அணியின் ஸ்கோரில் சேர்க்கப்பட்டது. -