

புதுடெல்லி: ஐரோப்பிய கால்பந்து மகளிா் சாம்பியன்ஸ் லீக் (யுஇஎஃப்ஏ) போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணீஷா கல்யாண் பெற்றுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் மணீஷா கல்யாண். இவர் யுஇஎஃப்ஏ மகளிர் கால்பந்துப் போட்டியில் விளையாடும் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து கிளப்பான அப்போலோன் லேடிஸ் எஃப்சி அணிக்காக தோ்வு செய்யப்பட்டிருந்தாா்.
நேற்று முன்தினம் என்கோமி பகுதியில் நடைபெற்ற லீக் போட்டியில் அப்போலோன் லேடிஸ் எஃப்சி அணியும், எஸ்எஃப்கே ரிகா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில், 60-வது நிமிடத்தில் சைப்ரஸ் நாட்டு வீராங்கனை மரிலேனா ஜாா்ஜியுவுக்கு மாற்று வீராங்கனையாக களமிறக்கப்பட்டாா் மணீஷா.
அந்த ஆட்டத்தில் அப்போலோன்அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரிகா அணியை தோற்கடித்தது. இதன்மூலம் யுஇஎஃப்ஏ போட்டியில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணீஷா பெற்றுள்ளார்.
20 வயதான மணீஷா, வெளிநாட்டு கிளப்புக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 4-ஆவது இந்திய வீராங்கனை ஆவாா்.
தேசிய அணிக்காகவும், இந்திய மகளிா் லீக் போட்டியில் கோகுலம் கேரளா அணிக்காகவும் மணீஷா விளையாடியுள்ளார். அண்மையில், இந்திய கால்பந்து சம்மேளனம் வழங்கிய சிறந்த வீராங்கனை விருதை 2021-22 சீசனுக்காக அவா் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.