தோல்வி வெறுப்பல்ல; பாடம் கற்றுத்தரும் அனுபவம்: முஷ்பிகுர் ரஹிம்

தோல்வி வெறுப்பல்ல; பாடம் கற்றுத்தரும் அனுபவம்: முஷ்பிகுர் ரஹிம்
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிராக அரிய வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி தழுவியது பாடம் கற்றுத்தரும் அனுபவம் என்று வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார்.

“சில வேளைகளில் தோல்வி ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்தும். 15 மாதங்கள் டெஸ்ட் போட்டியே ஆடாமல் வங்கதேச அணி இப்படி ஆடுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே எங்களால் ஓரளவுக்கு நிரூபிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளோம்.

இங்கிலாந்து போன்ற ஒரு அனுபவமிக்க அணிக்கு எதிராக நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை தெரிவிக்குமாறு ஆடினோம். தோல்வி வெறுப்பேற்றுகிறது என்ற வார்த்தையை நான் பயன்படுத்தப்போவதில்லை, ஆனால் இது ஒரு பாடம் கற்றுத்தரும் அனுபவம் என்றே கூறுவேன்.

முழு டெஸ்ட் போட்டியிலும் சீராக ஆடியது ஒரு சாதனைதான். 90-95% திட்டமிட்டபடி ஆடினோம், இன்னும் சில இடங்களில் சிறப்பாக கவனம் செலுத்தியிருக்கலாம்.

மெஹதி ஹசன், ஷாகிப் அருமையாக வீசினர். தமிம் இக்பால் தனது பாணியை தியாகம் செய்து அணிக்காக சிறப்பாக ஆடினார். வங்கதேசத்திற்கு இது ஒரு நல்ல டெஸ்ட் போட்டியாகும்.

கடைசியாக தைஜுல் சிங்கிள் எடுத்தது ஒன்றும் தவறல்ல, ஷபீர், தைஜுல் மீது முழு நம்பிக்கை வைத்து ரன்னை ஓடினார். தைஜுலும் அவ்வளவு மோசமான வீரர் அல்ல. சிங்கிள் வரும்போது அதனை எடுத்து விடுவது நல்லது என்றே நாங்களும் நினைத்தோம்.

நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் அசாதாரண டெஸ்ட் அணி என்று கூறுவதற்கில்லை. வெற்றி, நாங்கள் எங்களுக்காக நிர்ணயித்துக் கொண்ட இலக்கை எட்டியிருப்பதாக அமைந்திருக்கும். எப்படியிருந்தாலும் இங்கிலாந்து ஒரு அனுபவமிக்க அணி” என்றார் முஷ்பிகுர் ரஹிம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in