Last Updated : 21 Jun, 2014 07:42 PM

 

Published : 21 Jun 2014 07:42 PM
Last Updated : 21 Jun 2014 07:42 PM

ஸ்டூவர்ட் பின்னியைத் தேர்வு செய்ததன் மீதான விமர்சனம் நியாயமற்றது: திராவிட்

வங்கதேசத்தில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்த ஸ்டூவர்ட் பின்னி குறித்து ராகுல் திராவிட் தனது வெளிப்படையான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதாவது ஸ்டூவர்ட் பின்னியை இந்திய அணிக்குள் தேர்வு செய்தது பற்றி, குறிப்பாக இங்கிலாந்து தொடருக்கு இவரைத் தேர்வு செய்தது பற்றி சில தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விமர்சனங்களை நியாயமற்றது என்று கூறிய திராவிட், ஸ்டூவர்ட் பின்னி நிரூபித்த பிறகே தேர்வு செய்யப்பட்டார். என்றார்.

கடந்த சீசனில் கர்நாடகா அணி 3 கோப்பைகளை வெல்ல ஸ்டூவர்ட் பின்னி பங்களிப்பு செய்துள்ளார். அவர் ஒரு பயனுள்ள கிரிக்கெட் வீரர், இங்கிலாந்துக்கு எதிராக 2 ஸ்பின்னர்களை இந்தியா அணியில் வைத்துக் கொண்டு ஆடினால், 2002ஆம் ஆண்டு சஞ்சய் பாங்கர் இந்திய அணிக்கு பங்காற்றிய அதே விதத்தில் ஸ்டூவர்ட் பின்னியும் பங்காற்ற முடியும். ஆல்ரவுண்டராக பின்னால் களமிறங்கினால் அவர் பயனுள்ளவராகவே இருப்பார்.

மேலும் வங்கதேசத் தொடரில் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளமை அவரது தன்னம்பிக்கையை மேலும் தீவிரமாக்கியிருக்கும்” என்றார் திராவிட்.

அதே போல் வங்கதேசத் தொடரில் ஸ்விங் ஆட்டக்களத்தில் இந்திய பேட்ஸ்மென்கள் புஜாரா, ரஹானே ஆகியோரது ஆட்டம் சோபிக்கவில்லை என்பது இங்கிலாந்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

பயிற்சி ஆட்டங்களை எந்த விதத் தீவிரத்துடன் ஆடுகிறோம், எவ்வளவு தீவிரமாகப் பயிற்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்தே இங்கிலாந்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உள்ளது. நிச்சயம் வங்கதேசத்தில் இருந்தது போன்ற பிட்ச் இங்கிலாந்தில் இருக்காது என்றே கூறுவேன்.

இங்கிலாந்தில் முதல் 2 மணி நேரம் மேகமூட்டமான வானிலை இருக்கும் என்பதால் பந்துகள் ஸ்விங் ஆகிக் கொண்டேயிருக்கும் அப்போது கவர் டிரைவ் மற்றும் பந்துகள் எழும்பும் தறுவாயில் டிரைவ் ஆடுவது போன்ற ஷாட்களை லாக்கரில் வைத்துப் பூட்டிவிட வேண்டும். உணவு இடைவேளைக்குப் பிறகு சூழ்நிலை மாறும். ஆகவே முதல் 2 மணி நேர ஆட்டத்தில் ஷாட் தேர்வில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என்கிறார் திராவிட்.

இம்மாதம் 26ஆம் தேதி லீஷயர் அணிக்கு எதிராக இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்குகிறது, ஜுலை 1 ஆம் தேதி டெர்பிஷயர் அணிக்கு எதிராக 2வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்கம் மைதானத்தில் ஜூலை 9ஆம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x