

1982-ம் ஆண்டு 12-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அல்ஜீரியா, கேமரூன், ஹோன்டுராஸ், குவைத், நியூசிலாந்து உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க அணிகள் உலகக் கோப்பையில் விளையாட முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இத்தாலி களமிறங்கிய போது அந்த அணியுடன் சேர்ந்த அதிர்ஷ்டமும் களமிறங்கி அவர்களுக்காக விளையாடியது என்றுதான் கூற வேண்டும். இதனால் 3-முறையாக இத்தாலி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.
லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றியைக் கூட பெறாத இத்தாலி கோல் கணக்கின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெறாத ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். லீக் ஆட்டத்தில் போலந்து, பெரு, கேமரூன் ஆகிய அணிகளுடனான போட்டியை இத்தாலி டிரா செய்தது.
எனினும் 2-வது சுற்றில் இத்தாலி வீரர்கள் உத்வேகத்துடன் களமிறங்கினர். முக்கியமாக இத்தாலியின் பாலோ ரோஹி பிரேசில் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார். இதனால் பிரேசிலை 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. ஆர்ஜெண்டீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. அதே உத்வேகத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி போலந்து அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி – இத்தாலி அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல்கணக்கில் மேற்கு ஜெர்மனியை இத்தாலி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மொத்தம் 7 ஆட்டங்களில் 12 கோல்களை மட்டுமே அடித்து இத்தாலி கோப்பையைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த அணியின் பாலோ ரோஸி 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்க ஷூ பரிசை வென்றார். இவர் 1980 மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கி 2 ஆண்டுகள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி கேப்டன், கோல் கீப்பராக இருந்த டினோ ஜோப் அதிக வயதில் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்று, இப்போது வரை அதனை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இத்தாலி அணிக்காக உலகக் கோப்பையை வென்றபோது அவருக்கு வயது 40.
1982 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 52
மொத்த கோல்கள் - 146
ஒரு போட்டியில் சராசரி கோல் - 2.81
மைதானத்துக்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 18,56,277
டாப் ஸ்கோர்
பாலோ ரோஸி (இத்தாலி) - 6 கோல்கள்
கார்ல் ஹின்ஸ் (மேற்கு ஜெர்மனி) - 5 கோல்கள்
போனிக் (போலந்து) - 4 கோல்கள்
சிகோ (பிரேசில்) - 4 கோல்கள்