Published : 12 Oct 2016 01:25 PM
Last Updated : 12 Oct 2016 01:25 PM

வெற்றிக்கு காரணமான சிறிய பங்களிப்புகள்: விராட் விவரிப்பு

நியூஸிலாந்துக்கு எதிராக தொடரை வென்ற இந்திய அணியின் ஆட்டத்தில் சிறிய பங்களிப்புகள் குறித்து கேப்டன் விராட் கோலி பாராட்டிப் பேட்டியளித்துள்ளார்.

“இது அணியாக திரண்டு ஆடும் ஆட்டம், அப்படித்தான் ஆடப்பட்டது. எழுதுபவர்கள்- பாராட்டுபவர்களாக இருந்தாலும் விமர்சிப்பவர்களாக இருந்தாலும் ஆட்டத்திறன் தான் பேசப்படும். ஒரு வேகப்பந்து வீச்சாளர் கடினமாக உழைத்து 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்துவது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய பங்களிப்பாகும்.

இந்தத் தொடரில் நான் பார்ப்பது, ஜடேஜாவின் முதல் டெஸ்ட் பேட்டிங், விருத்திமான் சஹாவின் 2-வது டெஸ்ட் பேட்டிங், அதே போல் மொகமது ஷமியின் 2-வது டெஸ்ட் பந்து வீச்சு ஆகியவை முக்கியப் பங்களிப்புகளாகும். பெரிய அளவில் ரன்கள் குவிப்பதும், விக்கெட்டுகளை வீழ்த்துவதும் நிச்சயம் பாராட்டுதலிலிருந்து தப்ப முடியாது, ஆனால் சிறுசிறு பங்களிப்புகளை நாம் ஆராதிக்க வேண்டும்” என்றார்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது மொகமது ஷமியின் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஷமியைப் பாராட்டிய விராட் கோலி, “அணியில் பலரும் விரும்பும் மனிதர் ஷமி. அவரது மகள் மருத்துவமனையில் இருந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அவர் கூறித்தான் தெரியும். இந்நிலையில் அவர் களத்தில் பணியாற்றிய விதம் அபாரம்” என்றார்.

மேலும் கூறும்போது, “பேட்டிங்கில் களமிறங்கும் போது ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்யும் நோக்கத்துடன் களமிறங்குகின்றனர். நான் சதங்களை அடித்திருக்கிறேன், ஆனால் மிகப்பெரிய சதங்களை அடித்ததில்லை. ஒவ்வொரு முறை சதம் எடுத்து அவுட் ஆகும்போது இதனை பெரிய சதமாக மாற்ற முடியவில்லையே என்று நான் ஏமாற்றமடைந்துள்ளேன். மைல்கல்லை எட்டுவதுதான் குறியாக இருந்தது, ஆனால் இப்போது மைல்கல் முக்கியமல்ல என்று என் மனதை நான் தயார்படுத்திக் கொண்டுள்ளேன்.

ரசிகர்கள் உற்சாகமடைகின்றனர். சகவீரர்கள் அதனைப் பாராட்டுகின்றனர். ஆனால் இதனை பெரிய சதமாக மாற்ற வேண்டும் என்று என் மனதிற்குள் நான் புகுத்திக் கொள்கிறேன். அவர்கள் ஆதரவை நான் பாராட்டுகிறேன்.ஆனாலும் அதற்காக நான் சாதிக்க விரும்பியதையெல்லாம் சாதித்து விட்டதாகக் கருதவில்லை” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x