

அண்மையில் இங்கிலாந்து நாட்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் தொடரில் இந்திய லான் பவுல்ஸ் மகளிர் நால்வர் அணியினர் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தனர். இந்நிலையில், பேட்டி ஒன்றில் இந்தs சாதனைக்கு முன்னர் அவர்கள் எதிர்கொண்ட சோதனை மற்றும் விமர்சனங்கள் குறித்து வீராங்கனைகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த விளையாட்டுப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இது. லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகியோர் அரிதினும் அரிதான இந்த பதக்கத்தை வென்று கொடுத்தனர். நால்வரும் வெவ்வேறு தளங்களில் இயங்கி வருபவர்கள். அவர்களை ஒற்றை புள்ளியில் இணைத்தது அவர்கள் சார்ந்துள்ள விளையாட்டு மட்டுமே.
இந்நிலையில், தாங்கள் கடந்து வந்த தடைகற்களை அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். “நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தோம். எங்களை குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. அது அனைத்தும் எங்களை தாழ்த்தும் வகையில் அமைந்திருந்தது. எங்கள் மீது அழுத்தமும் அதிகம் இருந்தது. இந்த முறை நாங்கள் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பி இருந்தால் அடுத்த எடிஷனில் லான் பவுல்ஸ் விளையாட்டில் எங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போயிருக்கும்” என ரூபா ராணி தெரிவித்துள்ளார்.
“எங்களது தோற்றத்தின் காரணமாக தான் நாங்கள் அணியில் தெரிவு செய்யப்பட்டதாகவும் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எங்களது திறனின் மூலமாகவே இப்போது நாங்கள் பதக்கம் வென்றுள்ளோம். எங்களது முக அழகை பார்த்து யாரும் எங்களுக்கு பதக்கம் கொடுக்கவில்லை” என கண்ணீர் மல்க தங்கள் மீதான விமர்சனங்களை லவ்லி பகிர்ந்து கொண்டார்.