

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 61 ரன்களும், ஸ்டூவர்ட் பிராடு ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆலி போப் 73, ஸ்டூவர்ட் பிராடு 15, ஜேக் லீச் 15, ஜேம்ஸ் ஆண்டர்சன் 0 ரன்களில் வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, அன்ரிச் நார்ட்ஜே 3, மார்கோ ஜேன்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 44 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் டீன் எல்கர்47 ரன்னில் ஆண்டர்சன் பந்திலும், கீகன் பீட்டர்சன் 24 ரன்னில் மேத்யூ பாட்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர். சரேல் எர்வீ 60 ரன்களுடனும், எய்டன் மார்க்ரம் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.