

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் இணையர் 192 ரன்களுக்கு வெற்றி கூட்டணி அமைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் தவான் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் மூலம் 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி இந்திய அணி சுலபமாக வெற்றி பெற்றது. கில், 72 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். தவான், 113 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 40.3 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரெஜிஸ் சகாப்வா, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் போன்ற வீரர்கள் 30 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.
110 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அந்த அணி. பிராட் எவன்ஸ் மற்றும் ரிச்சர்டும் இணைந்து 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் மூலம் அந்த அணி ஸ்கோர் போர்டில் டீசன்டான ரன்களை போட்டது.
இந்திய அணி சார்பில் பல மாதங்களுக்கு பிறகு அணிக்குள் திரும்பியுள்ள தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். சிராஜ், 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தீபக் சாஹர், குல்தீப் மற்றும் அக்சர் படேல் போன்ற பவுலர்கள் மிகவும் சிக்கனமாக ரன்களை கொடுத்திருந்தனர்.