

ஹராரே: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் பவுலர்களில் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அசத்தலாக பந்து வீசி இருந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக இந்தத் தொடரில் செயல்பட்டு வருகிறார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி அங்குள்ள ஹராரே மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 40.3 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரெஜிஸ் சகாப்வா, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் போன்ற வீரர்கள் 30 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.
110 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அந்த அணி. பிராட் எவன்ஸ் மற்றும் ரிச்சர்டும் இணைந்து 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் மூலம் அந்த அணி ஸ்கோர் போர்டில் டீசன்டான ரன்களை போட்டது.
இந்திய அணி சார்பில் பல மாதங்களுக்கு பிறகு அணிக்குள் திரும்பியுள்ள தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். சிராஜ், 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தீபக் சாஹர், குல்தீப் மற்றும் அக்சர் படேல் போன்ற பவுலர்கள் மிகவும் சிக்கனமாக ரன்களை கொடுத்திருந்தனர்.
தற்போது 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டி வருகிறது.