Published : 17 Aug 2022 06:19 AM
Last Updated : 17 Aug 2022 06:19 AM

85 வருட வரலாற்றில் முதன் முறையாக இந்திய கால்பந்து சங்கத்துக்கு தடை விதித்தது பிஃபா - பின்னணி என்ன?

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துள்ளது. 85 வருட வரலாற்றில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு, பிஃபா-வால் தடை செய்யப்படுவது இதுவே முதன்முறை.

இதுதொடர்பாக பிஃபா விடுத்துள்ள அறிக்கையில், “சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் சட்டங்களை கடுமையாக மீறும் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கின் காரணமாக, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்ய பிஃபா கவுன்சிலில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

நிர்வாகக் குழு என்பது மூன்றாம் தரப்பு நிர்வாகமே, எனவே நிர்வாகக் குழு அமைப்பு கலைக்கப்பட்டு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கீழ் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து தினசரி நிர்வாகக் கட்டுப்பாடுகளும் வருகிறதோ அன்று தடை நீங்கும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவு காரணமாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துள்ளது. இந்தத் தொடரை வரும் அக்டோபர் 11 முதல் 30-ம் தேதி வரை இந்தியாவின் 3 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்துவருவதாகவும், தேவைப்பட்டால் இந்த விவகாரம் கவுன்சிலுக்கு அனுப்பி ஆலோசிக்கப்படும் எனவும் பிஃபா தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான தொடர்பில் இருந்து வருவதாகவும் பிஃபா கூறியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றம், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரஃபுல் படேலை, அந்த பதவியில் இருந்து நீக்கியது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்வாகிகள் தேர்தலை நடத்த பிரஃபுல் படேல் நடவடிக்கை எடுக்காததை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

பிரஃபுல் படேலை நிர்வாககுழுவில் இருந்து நீக்கியதுடன் அவர் தலைமையில் இயங்கிய நிர்வாகக் குழுவையும் முழுமையாக கலைத்தது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலை நடத்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தாவே தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.

மேலும், மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியைகட்டாயம் இந்தியாவில் நடத்தவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சர்வதேச கால்பந்து தொடர்பான விவகாரங்களை கவனிக்க இந்த கமிட்டி 12 பேர் கொண்ட ஆலோசனை குழுவை அமைத்தது. இதைத்தொடர்ந்து புதிய விதிகள் அடங்கிய அறிக்கையும் உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் ஆகஸ்ட் 28-ம் தேதிநடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்தான் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது பிஃபா.85 வருட வரலாற்றில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு, பிஃபா-வால் தடை செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பின்னணி என்ன?

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீதான பிஃபா தடைக்கு முக்கிய காரணமாக பிரஃபுல் படேல் அறியப்படுகிறார். தொடர்ந்து 3-வது முறையாக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த பிரஃபுல் படேலின் பதவிக்காலம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், அவர் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அப்பதவியில் இருந்து விலக மறுத்தார்.

விதிமுறைகளின்படி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பதவியில் அதிகபட்சம் 12 ஆண்டுகள் மட்டுமே தொடர முடியும். இதை எதிர்த்து முன்னாள் கோல் கீப்பரும் தற்போதைய பாஜக தலைவருமான கல்யான் சவுபேவின் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை காரணம் காட்டிதான் பிரஃபுல் படேல் பதவியில் இருந்து விலக மறுத்திருந்தார்.

பிஃபா தலையீடு எதற்கு?

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தலில் 36 மாநில சங்கங்களின் பிரதிநிதிகளும், 36 பிரபல கால்பந்து வீரர்களின் பிரதிநிதிகளும் வாக்களிப்பார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. வீரர்கள் பட்டியலில் பாய்ச்சுங் பூட்டியா, ஐஎம் விஜயன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

வாக்களிக்கும் உரிமையில் 50 சதவீதம் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட சில புதிய விதிகளுக்கு பல்வேறு மாநில கால்பந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விதிகள் அபத்தமாகவும் பாரபட்சமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள், இதுதொடர்பாக பிஃபாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.

இதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையில் தனிநபர்களின் சேர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பிஃபா கடிதம் எழுதியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு பிஃபா தடை விதித்துள்ளது.

தடையின் பாதிப்பு...

பிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பிரநிதிகள், கிளப்கள் எந்த ஒரு சர்வதேச கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் பயிற்சிகளில்கூட கலந்து கொள்ள இயலாது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x