உலகக் கோப்பைக் கால்பந்து: கானாவுக்கு அதிர்ச்சியளித்த யு.எஸ்.

உலகக் கோப்பைக் கால்பந்து: கானாவுக்கு அதிர்ச்சியளித்த யு.எஸ்.
Updated on
1 min read

பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை கானா அணியை யு.எஸ். அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் நாட்டல் என்ற இடத்தில் நடந்தது. ஆட்டம் முடியும் தறுவாயில் யு.எஸ். வீரர் கிரகாம் ஸ்யூசி, கார்னர் ஷாட்டை அடிக்க ஜான் புரூக்ஸ் டைமிங்காக எம்பி அதனை தலையால் கோல் அடித்தார். இந்த கோல் வெற்றி கோலாக அமைந்தது.

மேலும் அமெரிக்க அணிக்காக பதிலி வீரர் ஒருவர் அடிக்கும் முதல் கோலாகும் இது. கடந்த 2 உலகக் கோப்பைப் போட்டிகளில் கானா அணி யு.எஸ். அணி வெளியேற பிரதானக் காரணமாக இருந்ததால் அமெரிக்க ரசிகர்கள் பழிதீர்ப்பு மனோநிலையில் இருந்தனர்.

ஆட்டம் தொடங்கி 32வது வினாடியில் இடது புறத்தில் அமெரிக்க வீரர்கள் பந்தை எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல பிறகு பந்து கிளிண்ட் டெம்ப்சீ என்ற ஸ்ட்ரைக்கருக்கு அடிக்கப்படுகிறது. அவரோ கானாவின் 2 அல்லது 3 தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து எடுத்துச் சென்று அபாரமான கோலாக மாற்றுகிறார். இந்த உலகக் கோப்பையின் அதிவேக கோல் இதுவே. ஆட்டம் தொடங்கி 32வது வினாடியில் கோல் விழுவது இந்த உலகக் கோப்பையில் நிகழ்த்தப்பட்ட இன்னொரு சாதனையாகும்.

இடைவேளையின் போது யு.எஸ் அணி 1-0 என்று முன்னிலை வகித்தது. கானா அணி ஆட்டம் முடியும் 8 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கோல் அடித்து சமன் செய்தது. அந்த அணியின் ஆந்த்ரே ஆயூ கோல் அடித்தார்.

பிறகு ஆட்டம் முடிய சில வினாடிகள் இருக்கும்போது ஜான் புரூக்ஸ் அருமையாக தலையால் அடித்த கோல் யு.எஸ். அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in