

டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் இந்த ஜோடி தைவானின் ஹாவோ சிங் சான் - யங் ஜான் சான் ஜோடியை 7-6 (12-10) 7-5 என்ற நேர் செட்களில் போராடி வீழ்த்தியது.
பெண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் பல சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்த சானியா - ஹிங்கிஸ் ஜோடி கடந்த ஜூலை மாதம் பிரிந்தது. அதன் பிறகு இந்த போட்டித் தொடருக்காக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
முன்னதாக ஒற்றையர் பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையான கார்பைன் முகுருசா, 3-6, 6-0,6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கஸ்நெட் சோவாவை தோற்கடித்தார்.
ஆண்களுக்கான ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டிகள் பசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிச் சுற்றுக்கு வாவ்ரிங்கா, டெல் போட்ரோ ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் வாவ்ரிங்கா 7-6 (4), 6-7 (3), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் டொனால்ட் யங்கை போராடி வென்றார். இப்போட்டியில் வாவ்ரிங்கா 16 ஏஸ்களைப் பறக்கவிட்டார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீரரான டேவிட் கோஃபினை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி டெல் போட்ரோ அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.