பிசிசிஐ நிதி அதிகாரங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிசிசிஐ நிதி அதிகாரங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Updated on
1 min read

லோதா கமிட்டி பரிந்துரைகள் மீதான பிசிசிஐ-யின் எதிர்ப்புக்கு கொஞ்சமும் பிடிகொடுக்காத உச்ச நீதிமன்றம், பிசிசிஐ வசம் உள்ள நிதி அதிகாரங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும், பிசிசிஐ-யின் அதிக தொகை ஒப்பந்தங்களை தணிக்கையாளர்கள் மூலம் ‘ஆய்வு’ செய்ய லோதா கமிட்டிக்கு அறிவுறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு ஒத்துழைக்கும் வரை பிசிசிஐ-யிடமிருந்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு ‘நயா பைசா’ அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமை அமர்வு தங்களது அக்டோபர் 7-ம் தேதி உத்தரவை உறுதியாக பின்பற்றுவதாக கூறியுள்ளது.

மேலும் பிசிசிஐ செய்யும் ஒப்பந்தங்களின் உச்ச வரம்பு என்னவென்பதை லோதா கமிட்டி நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஒரு வரம்புக்கு மேலான தொகை கொண்ட ஒப்பந்தங்களுக்கு லோதா கமிட்டியின் ஒப்புதல் அவசியம் என்றும் பிசிசிஐ-யின் நிதி அதிகாரங்களுக்கு கெடுபிடி விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும் தனிப்பட்ட முறையில் தணிக்கையாளர் ஒருவர் பிசிசிஐ-யின் கணக்குகளை ஆய்வு செய்து, சரிபார்த்து ஒப்பந்தங்களுக்கான உச்ச வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவுகள் மீதான ஏற்பை பிசிசிஐ செயலர், மற்றும் தலைவர் 2 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகருக்கு லோதா குழுவினர் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு எந்த ஒரு தொகையும் அளிக்கப்படக்கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ள உச்ச நீதிமன்றம் 25 மாநில வாரியங்களும் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல் செய்வதாக எழுத்துபூர்வ தீர்மான ஒப்புதலுடன் கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை தொகையைப் பெற்ற 13 கிரிக்கெட் வாரியங்களும் அதனை பயன்படுத்தக் கூடாது என்றும் தனது அக்டோபர் 7-ம் தேதி உத்தரவை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.

அக்டோபர் 7-,ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தீர்ப்பில் கூறும்போது, “ஜூலை 18, 2016 முதல் நிகழ்ந்தவைகள் மற்றும் லோதா கமிட்டி நிலை அறிக்கையில் கூறப்பட்டவை முதற்கட்ட அளவில் தெரிவிப்பது என்னவெனில் லோதா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு பிசிசிஐ எந்த வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்பதோடு முட்டுக்கட்டை போடுதல், சில வேளைகளில் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் போக்காகவே இருந்து வருகிறது.

இத்தகைய அணுகுமுறை கமிட்டியின் செயல்பாடுகளை முடக்குவதோடு உச்ச நீதிமன்றத்தின் மரியாதைக்கும் இழுக்கு விளைவிப்பதாக உள்ளது” என்று கண்டித்திருந்தது.

அதே நிலைப்பாட்டில்தான் இன்று உச்சநீதிமன்றம் பிசிசிஐ-யின் நிதி அதிகாரங்களுக்கு எல்லை வகுக்கும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in