

இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிஃபா சஸ்பெண்ட் செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இருப்பது பிஃபா சட்டங்களை மீறுகின்ற வகையில் உள்ளது. அதனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிஃபா .
மேலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகக் குழுவிற்கு உரிய முறையில் உறுப்பினர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் உடனடியாக இந்த இடைநீக்க உத்தரவு திரும்ப பெறப்படும் என பிஃபா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தனது ஆதங்கத்தை பாய்சங் பூட்டியா வெளிப்படுத்தி உள்ளார்.
“இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிஃபா சஸ்பெண்ட் செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இதனை நான் பிஃபாவின் மிகக் கடுமையான நடவடிக்கையாக பார்க்கிறேன். இருந்தாலும் நமது நாட்டின் கால்பந்து நிர்வாக சிஸ்டத்தை சீர்படுத்த இதனை ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன்.
இந்திய கால்பந்தின் சிறப்புக்காக கூட்டமைப்பின் நிர்வாகிகள், மாநில சங்கங்கள் என எல்லோரும் ஓர் அணியில் இணைந்து செயல்படுவது அவசியம்” என தெரிவித்துள்ளார்.
பிஃபாவின் இந்த நடவடிக்கை குறித்து கால்பந்து விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் என பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.