Published : 10 Oct 2016 11:24 AM
Last Updated : 10 Oct 2016 11:24 AM

2-வது ஒருநாள்: மோர்டசா ஆல்ரவுண்ட் ஆட்டம்; வங்கதேசத்திடம் இங்கிலாந்தும் தோல்வி

மிர்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது வங்கதேசம்.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 204 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

ஜோஸ் பட்லர் 57 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து எல்.பி. ஆகிச் செல்லும் போது வங்கதேச வீரர் ஒருவர் ஸ்லெட்ஜ் செய்ய பதற்றம் அதிகரித்தது.

இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி முதல் 10 ஒவர்களுக்குள்ளேயே 26/4 என்று ஆனது. இதில் முதல் போட்டியில் சதம் எடுத்த பென் ஸ்டோக்ஸ், மற்றும் பென் டக்கட் ஆகியோர் விக்கெட்டுகளும் அடங்கும் இருவருமே டக் அவுட்.

தொடக்கத்திலேயே ஒரு முனையில் ஷாகிப் அல் ஹசன் அறிமுகம் செய்யப்பட்டர், மறு முனையில் மோர்டசா வீசினார். ஜே.எம்.வின்ஸ் மோர்சசா பந்தை பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் வெளியேறினார். டக்கெட், ஷாகிப் அல் ஹசனின் அருமையான பந்தில் ரன் எடுக்காமல் பவுல்டு ஆனார்.

எப்பவும் பவுண்டரி அடிக்க விரும்பும் ஜேசன் ராய் 13 ரன்களில் ஒரு பவுண்டரியையும் அடிக்க முடியாமல் வெறுப்பில் ஒரு பந்தை பவுண்டரி அடிக்க முயன்று கோட்டை விட பிளம்ப் எல்.பி.ஆனார். பென் ஸ்டோக்ஸ் மோர்டசா பந்து ஒன்றை லெக் திசையில் அடிக்க முயன்று ரன் எடுக்கும் முன்னரே பவுல்டு ஆகி வெளியேற இங்கிலாந்து 10-வது ஓவரில் 26/4 என்று ஆனது.

பட்லர், ஜானி பேர்ஸ்டொ இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 79 ரன்களைச் சேர்த்தனர். பேர்ஸ்டோ 35 ரன்களை எடுத்தார் இதற்கு 53 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டார் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.

இந்நிலையில் தனது முதல் 2 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்த டஸ்கின் அகமது மீண்டும் வந்து பேர்ஸ்டோ விக்கெட்டை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடிக்க வீழ்த்தினார். பட்லர் 57 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து டஸ்கின் பந்தை சற்றே முன்னேறி வந்து அடிக்க முயன்றார் அது நேர் பந்து கால்காப்பைத் தாக்க ரிவியூவில் எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பட்லர் கடும் ஏமாற்றமடைந்தார், மேலும் வங்கதேச வீரர்களில் ஒருவர் பட்லரை நோக்கி ஏதோவொன்று கூறப்போக வாக்குவாதம் நடந்தது. நடுவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மொயின் அலி 4 ரன்களில் நசீர் ஹுசைனிடம் வீழ்ந்தார். கிறிஸ் வோக்சை 7 ரன்களில் டஸ்கின் வீழ்த்தினார். 132/8 என்ற நிலையில் அடில் ரஷித் (33), ஜேக் பால் (28) இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 49 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 204 வரைக்கும் கொண்டு வந்தனர், வெற்றிக்குத் தேவை 35 ரன்கள் என்ற சமயத்தில் மோர்டசா, பால் விக்கெட்டை வீழ்த்தி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் முன்னதாக பேட்டிங்கில் கடைசியில் இறங்கி 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 44 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முன்னதாக முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட வங்கதேசம் முதலில் 39/3 பிறகு 89/4 பிறகு 169/7 என்று தடுமாறியது. மஹமுதுல்லா மட்டுமே முதல் வரிசையில் அபாரமாக ஆடி 75 ரன்கள் எடுத்தார். கடைசியில் மொசாடெக் ஹுசைன் 29 ரன்களையும், நசிர் ஹுசைன் 27 ரன்களையும், மோர்டசா 44 ரன்களையும் சேர்த்தது வெற்றியைத் தீர்மானித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x