கனடா ஒபன் டென்னிஸ் தொடரில் 3-வது முறையாக ஹாலப் சாம்பியன்

சிமோனா ஹாலப்
சிமோனா ஹாலப்
Updated on
1 min read

டொராண்டோ: கனடா ஒபன் டென்னிஸ் தொடரில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலப், பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மியாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை சிமோனா ஹாலப் 6-3 என கைப்பற்றினார். இதற்கு 2-வது செட்டில் பதிலடி கொடுத்த பீட்ரிஸ் ஹடாட் மியா அந்த செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார். இதனால் வெற்றியை தீர்மானித்த 3-வது செட் ஆட்டம் பரபரப்பானது.

இந்த செட்டை 6-3 என சிமோனா ஹாலப் வென்றார். முடிவில் 2 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிமோனா ஹாலப் 6-3,2-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார். கனடா ஓபனில் சிமோனா ஹாலப் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளிலும் சிமோனா ஹாலப் கோப்பையை வென்றிருந்தார்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலப் வென்றுள்ள 24-வது கோப்பை இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார் சிமோனா ஹாலப். வெற்றி குறித்து சிமோனா ஹாலப் கூறும்போது, “இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் 10 இடங்களுக்குள் வந்துள்ளேன். இந்த போட்டியில் வெளிப்படுத்திய செயல்திறன் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in