Published : 28 Oct 2016 05:37 PM
Last Updated : 28 Oct 2016 05:37 PM

ஸ்டோக்ஸ் பவுன்சரில் கீழே விழுந்த முஷ்பிகுர்; தமிம் சதத்திற்கு பிறகு சரிந்த வங்கதேசம்

டாக்காவில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆட்ட முடிவில் இங்கிலாந்து குக் (14), டக்கெட் (7), பாலன்ஸ் (9) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. நல்ல விஷயம் என்னவெனில் ஜோ ரூட் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார், இவருடன் மொயின் அலி 2 ரன்கள் எடுத்து நிற்கிறார்.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து 171/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 49 ரன்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 220 ரன்களுக்குச் சுருண்டது.

அதாவது, தமிம் இக்பால் மிகப்பிரமாதமாக விளையாடி 147 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து மொயின் அலி பந்தில் எல்.பி.ஆகி வெளியேறியவுடன் அடுத்த அதிகபட்ச ஸ்கோர் வீரர் மொமினுல் ஹக் 111 பந்துகளில் 10 அருமையான பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து மொயின் அலி பந்தில் பவுல்டு ஆனார். பிறகு மஹ்முதுல்லாவை ஸ்டோக்ஸும் முஷ்பிகுர் ரஹிமை மொயின் அலியும் வெளியேற்ற சபீர் ரஹ்மான், சுவாகத ஹோம் ஆகியோரை முறையே ஸ்டோக்ஸ், வோக்ஸ் சொற்ப ரன்களில் காலி செய்ய ஷாகிப் உல் ஹசனை வோக்ஸ் வீழ்த்தினார். இதனையடுத்து 41-வது ஓவரிலிருந்து 9 விக்கெட்டுகளை மடமடவென இழந்து அடுத்த 22.5 ஓவர்களில் 220 ரன்களுக்குச் சுருண்டது வங்கதேசம்.

முஷ்பிகுர் ரஹிம் தப்பினார்:

ஆட்டத்தின் 53-வது ஓவரில் 3 ரன்களில் இருந்த போது முஷ்பிகுர் ரஹிம், ஸ்டோக்ஸ் பவுன்சரில் அடிவாங்கி மல்லாந்தார். ஷார்ட் ஆஃப் லெந்தில் விழுந்த அந்தப் பந்து கூடுதலாக சீறி எழுந்தது. இதை எதிர்பாராத முஷ்பிகுர் ஒருமாதிரியான நிலைதடுமாற்றத்தில் ஆட பந்து தோள்பட்டையின் பின்புறம் பட்டு ஹெல்மெட்டின் உள்ளே புகுந்து தாக்கியது, இந்த அதிர்ச்சியில் அவர் மல்லாந்தார், நல்ல வேளையாக அவர் மட்டையில் பட்டு ஹெல்மெட் உள்ளே சென்றிருந்தால் அடி பலமாக போயிருக்கும்.

முஷ்பிகுர் கீழே விழுந்தவுடன் அனைத்து வீரர்களும் அவரருகே கூடினர். அவரது பெற்றோரும் இதனை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மைதானத்திற்கு உடற்தகுதி நிபுணர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை அவர் தொடர்ந்து ஆடினார். ஆனால் மேலும் 1 ரன் சேர்த்து அவர் மொயின் பந்தில் குக்கிடம் கேட்ச் கொடுத்து காலியானார்.

இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வோக்ஸ் அருமையாக வீசி 3 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் மீண்டும் 11 ஓவர்களில் வெறும் 13 ரன்களையே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இங்கிலாந்து பேட்டிங் செய்த போது மீண்டும் வளரும் வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன், குக் மற்றும் பாலன்ஸ் விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷாகிப் அல் ஹசன் டக்கெட் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தில் நாளை 2-ம் நாள் ஆட்டத்தை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x