

புதுடெல்லி: இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அண்மையில் பிரிட்டனின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
குறிப்பாக இந்திய வீரர், வீராங்கனைகள் பளுதூக்குதல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். மகளிர் டி20 கிரிக்கெட், லான்பவுல்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளிலும் பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்திய அணியினர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்து கவுரவப்படுத்தினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: நீங்கள் அனைவரும் பர்மிங்ஹாம் போட்டியில் பங்கேற்றிருந்தபோது, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் நள்ளிரவிலும் கண் விழித்திருந்து, உங்களது ஒவ்வொரு செயல்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய அணியினரை வழியனுப்பியபோது நாம் வாக்குறுதி அளித்தபடி, இன்றைய தினம் வெற்றியைக் கொண்டாடி வருகிறோம்.
பல போட்டிகளில் நூலிழையில் பதக்க வாய்ப்பை நாம் நழுவ விட்டோம். பதக்க எண்ணிக்கை என்பது செயல் திறனை முழுமையாக பிரதிபலிக்காது. முந்தைய போட்டியுடன் ஒப்பிடுகையில், 4 புதிய விளையாட்டுகளில், வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது.
லான் பவுல்ஸ் முதல் தடகளம் வரை, நமது வீரர்கள் அற்புதமாக விளையாடி வெற்றிகளைக் குவித்துள்ளனர். இந்த செயல்பாடு மூலம்,இதுபோன்ற புதிய விளையாட்டுக்களில் ஈடுபாடு காட்டும் சூழல், இந்தியாவில் பெருமளவு அதிகரிக்கும். இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடங்கியுள்ளது.
குத்துச்சண்டை, ஜுடோ, மல்யுத்தப் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கிய வீரர்கள் 31 பதக்கங்களை வென்றிருப்பது, இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
திறமைவாய்ந்த புதியவர்களை அடையாளம் கண்டு பதக்கம் வெல்லும் அளவுக்கு அவர்களை மேம்படுத்த வேண்டும். இதற்கான பணிகளை மத்திய விளையாட்டுத்துறை மேற்கொள்ளவேண்டும்.
உலகிலேயே மிகச்சிறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல்மிக்க விளையாட்டுச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது.
அடுத்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்கள் ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பிரதமர் மோடியுடன் இந்திய வீரர், வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.