Last Updated : 13 Aug, 2022 05:58 AM

Published : 13 Aug 2022 05:58 AM
Last Updated : 13 Aug 2022 05:58 AM

காமன்வெல்த் விளையாட்டு ஸ்டீப்பிள்சேஸில் கென்யா ஆதிக்கம் உடைந்தது எப்படி? - மனம்திறக்கும் அவினாஷ்

காமன்வெல்த் விளையாட்டில் ஸ்டீப்பிள்சேஸில் கடந்த 1990-ஆண்டு முதல் கென்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 1990, 1994ம் ஆண்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை கைப்பற்றிய இவர்கள் அதன் பின்னர் 5 முறை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம்என 3 பதக்கங்களையும் மொத்தமாக அள்ளினர். இவர்களது ஆதிக்கத்தைத்தான் அசைத்து பார்த்துள்ளார் அவினாஷ்.

பர்மிங்காமில் கடைசி 100 மீட்டர் வரை அவினாஷுக்கு முன்னாள் கொர்னேலியஸ் கிப்ருடோ, அமோஸ் சீரம், ஆபிரகாம் கிபிவோட் ஆகிய 3 கென்யவீரர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு தடையை தாண்டும் போது 4-வது நபராக துள்ளிப் பாய்ந்தார் அவினாஷ். ஒவ்வொரு கென்ய வீரரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியபடி சென்ற அவினாஷ், ஆபிரகாம் கிபிவோட்டுக்கு சிறிது பயத்தைக் காட்டினார்.

அப்போது அவர், சுதாரித்ததால் முதலிடத்தை நூலிழையில் பிடித்து தங்கத்தை தட்டிச்சென்றார். அவினாஷின் இந்த சாதனை இந்திய தடகளத்தை உலக அரங்கம் உற்று நோக்கி பார்க்க வைத்துள்ளது.

ராணுவ ஓட்டப்பந்தய வீரரான அவினாஷ் நாட்டுக்காக தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓடினார். இது அவரது பேரார்வத்தையும், விடா முயற்சியையும் வெளிப்படுத்தியது. 27 வயதான அவினாஷ் கடந்த மாதம்மொராக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் பந்தய தூரத்தை 8:12.48 நொடிகளில் கடந்திருந்தார். இதனுடன் ஒப்பிட்டாலே அவரது செயல் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெரியவரும். கடந்த சில ஆண்டுகளில் 9-வது முறையாக நேரத்தை மேம்படுத்தியுள்ளார்.

காமன்வெல்த் வரலாற்றில் முதன்முறையாக ஸ்டீப்பிள்சேஸில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள அவினாஷ் சாப்ளே கூறும்போது, “நான் எதையும் சாதிக்காதது போல் பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும். பதக்கம் வென்றதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் அசாதாரணமான ஒன்றைச் செய்துவிட்டேன் என்று நான் நினைக்கக் கூடாது, இதில் அதிக கவனம் கொள்வேன். தோல்வியடைந்த போட்டிகைளை நினைவு கூர்ந்து அதில் இருந்து கற்றுக்கொள்கிறேன். நான் என் வெற்றிகளை மறந்து விடுகிறேன்” என்றார்.

இந்த மனநிலைதான் ஏமாற்றத்தைகடந்து செல்ல அவினாஷுக்கு உதவுகிறது. சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் அவினாஷ் 11-வது இடத்தை பிடித்திருந்தார். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகவும் மெதுவாக ஓடிய வீரர் என்ற மோசமான பெயரை பெற்றிருந்தார். அந்த போட்டியில் இலக்கை கடக்க அவினாஷ் 8:31.75 நொடிகள் எடுத்திருந்தார். அதன் பின்னர் கடின பயிற்சி, விடா முயற்சியால் தற்போது பர்மிங்காமில் 8:11.20 நொடிகளில் இலக்கை அடைந்து தடகள உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

அவினாஷ் சாப்ளே தொடர்ந்து கூறும்போது, “ சிறந்த பயிற்சி கிடைத்தும் எதையும் சாதிக்க முடியவில்லை என்றால், நான் எதையும் சாதிக்க முடியாது என்று நினைத்தேன்.

நான் அமெரிக்காவில் இருந்தபோது, கென்ய விளையாட்டு வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டேன். அவர்களுடன் பயிற்சி செய்ய முடியும்போது, என்னால் ஏன் அவர்களுக்கு இணையாக போட்டியிட முடியாது?’ என்று நினைத்தேன், அதனால், எந்த நிறமாக இருந்தாலும் பதக்கம்தான் இலக்கு என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

காமன்வெல்த் விளையாட்டுக்கு சென்றவுடன், நான் தங்கம் வெல்ல விரும்பினேன். ஓட்டத்தை தொடங்கியதில் சிறிய தவறு இருக்கலாம். என்னிடம் நிறைய ஆற்றல் மிச்சமிருந்தது, ஆனால் என்னால் ஆபிரகாம் கிபிவோட்டை வெல்ல முடியாமல் போனது.

நீங்கள் காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு பற்றியே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முடியாது. “எளிதாக கிடைக்காத விஷயங்களுக்காக கடுமையாகப் போராட வேண்டும், கென்ய வீரர்களை வீழ்த்தி உலகளவிலான போட்டியில் பதக்கங்களை வெல்வதற்கு ஒரு இந்திய வீரரும் நினைக்காத நிலையில் இந்த விஷயத்தை சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” என்றார்.

காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளேவின் உற்சாகமான ஓட்டம், இருண்ட பாதையில் ஒளிரும் சுடர் போல், அவருக்குள் இருந்த தீப்பொறியை நமக்குக் காட்டியது. பர்மிங்காமின் அலெக்சாண்டர் ஸ்டேடியம் பாதையைச் சுற்றி ஏழரை சுற்றுகள் நடந்த போட்டியில் இலக்கை நெருங்க, நெருங்க காற்றை கிழித்துக்கொண்டு விரைந்தார் அவினாஷ். இந்த ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற கென்யாவின் ஆபிரகாம் கிபிவோட்டுக்கும் (8:11.15), அவினாஷுக்கும் இடையிலான நேர வித்தியாசம் வெறும் 0.05 நொடிகள் தான். 8:11.20 நிமிடங்களில் இலக்கை கடந்த அவினாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x