

மும்பை: எதிர்வரும் 2023 மார்ச் மாதத்தில் மகளிருக்கான ஐபிஎல் தொடரை தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 முதல் மகளிருக்கான டி20 சேலஞ்ச் தொடரை பிசிசிஐ நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்கள் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. வெகு விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் அமீரகத்தில் இதே போல டி20 லீக் தொடர் நடத்தப்பட உள்ளது. இதில் மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பிக் பேஷ் மற்றும் தி ஹண்ட்ரட் லீகில் பிரத்யேக தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆடவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், மகளிருக்கும் இதே போன்ற லீக் வேண்டுமென்ற குரல் ஒலித்து வந்தது. இப்போது பிசிசிஐ அதற்குத் தீர்வு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு ஏற்ற வகையில் உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் காலண்டரில் பிசிசிஐ மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாம். அதன்படி பார்த்தால் எதிர்வரும் 2023 மார்ச் மாதம் மகளிர் ஐபிஎல் தொடர் நடத்த சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் முதல் ஏப்ரல் வரையில் உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படும். இப்போது அதனை ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கி, பிப்ரவரி இறுதியில் முடிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த மாதம் நடைபெற உள்ள பிசிசிஐ வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்.
மகளிருக்கான ஐபிஎல் தொடர் மிகவும் பிரம்மாண்ட வெற்றியை பெறும் என தான் நம்புவதாகவும். அடுத்த ஆண்டு அதனை தொடங்க சரியாக இருக்கும் எனவும் பிசிசிஐ தலைவர் கங்குலி கடந்த பிப்ரவரியில் தெரிவித்திருந்தார்.