

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 5 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. டேவன் கான்வே 43, கேன் வில்லியம்சன் 47 ரன்கள் விளாசினர். 186 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆஸி. வீரர்கள் ரூ.25 லட்சம் நன்கொடை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்களது சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த பரிசுத் தொகையை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டின் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நன்கொடையாக அளித்துள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் அளித்துள்ள ரூ. 25.36 லட்சத்தைக் கொண்டு யுனிசெஃப் அமைப்பு, இலங்கையில் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், குடும்பங்களுக்கு உதவி செய்யவுள்ளது.
நட்சத்திர வீரராக டு பிளெஸ்ஸிஸ் ஒப்பந்தம்:
2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 அணிகள் பங்கேற்கும் தொழில் முறை ரீதியிலான டி20 லீக்கை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதில் ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டு பிளெஸ்ஸிஸை நட்சத்திர வீரராக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் டு பிளெஸ்ஸிஸ் 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்தில் சிங்கப்பூருடன் இந்தியா மோதல்:
இந்திய ஆடவர் கால்பந்து அணியானது வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய அணிகளுடன் சர்வதேச அளவிலான நட்புரீதியிலான ஆட்டங்களில் விளையாடுகிறது. செப்டம்பர் 24-ம் தேதி சிங்கப்பூர் அணியுடனும், 27-ம் தேதி வியட்நாம் அணியுடன் இந்தியா மோதுகிறது