Published : 03 Oct 2016 07:19 PM
Last Updated : 03 Oct 2016 07:19 PM

கொல்கத்தா டெஸ்ட் பிட்ச் பற்றி கோலி, டெய்லர் கருத்து

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நம்பர் 1 நிலைக்கு உயர்ந்ததோடு, தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் பிட்ச் பற்றி இரு அணி கேப்டன்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு மேடையில் கூறும்போது, “அருமையான டெஸ்ட் போட்டி, அபாரமான டெஸ்ட் பிட்ச். ஆங்காங்கே பவுன்ஸ் சற்று முன்பின் இருந்தது தவிர பிட்ச் போகப்போக இன்னும் நன்றாகி விடும்.

சஹா, புவனேஷ் குமார், ஷமி கடைசியில் செய்த பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. சஹா அருமை! குறிப்பாக அவர் இப்போது நாட்டின் சிறந்த விக்கெட் கீப்பர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அருமையாக செயலாற்றி வருகிறார். மே.இ.தீவுகளில் அவர் எடுத்த சதம் அவரது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பின்கள வீரர்களுடன் எப்படி பேட்டிங் செய்ய வேண்டுமென்பதை தற்போது சஹா புரிந்து கொண்டிருக்கிறார்.

முதல் இன்னிங்சில் தளர்வான சில ஷாட்களினால் விக்கெட்டுகளை தூக்கி எறிந்தோம் என்று புரிந்து கொண்டோம், 2-வது இன்னிங்சில் நியூஸிலாந்து பவுலர்கள் நல்ல நெருக்கடி கொடுத்தனர். ரோஹித் சர்மா நெருக்கடியை சமாளித்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது. ஈடன் கார்டன் மைதானத்திற்கும் அவருக்கும் இருக்கும் நேசம் நீங்கள் அறிந்ததே. அனைத்தையும் விட இன்று இந்த விக்கெட்டுகளைக் கைப்பற்ற ரசிகர்களின் ஆதரவுதான் முக்கியமாக அமைந்தது. குறிப்பாக ஷமி ஓடி வரும்போது ரசிகர்கள் குரல் எழுப்புவது பவுலருக்கு பெரிய உத்வேகமளிக்கக் கூடியது.

சீரான கிரிக்கெட்டை ஆடுவதே எங்கள் குறிக்கோள், தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்குச் செல்வதும், பின்னடைவதும் நம் கையில் இருப்பதல்ல, அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதால் இம்முறை நம்பர் 1 இடத்தைத் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ராஸ் டெய்லர் கூறும்போது, “கடும் வெயிலும் ஈரப்பதம் நிரம்பிய வானிலையில் பவுலர்கள் அருமையாகச் செயல்பட்டது பாராட்டத்தக்கது. நாங்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தோம் ஆனால் அவர்கள் மீண்டு எழுந்தனர். குறிப்பாக சஹா 2 இன்னிங்ஸ்களிலும் சிறப்புற்றார்.

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் பிட்ச் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தோம், ஒரு நல்ல கிரிக்கெட் பிட்ச். இந்தபிட்ச் இப்போதுதான் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் போகப் போக இன்னும் நன்றாகஆடும். 112 ரன்கள் பின் தங்கினால் எந்த அணிக்கும் நெருக்கடிதான். நாங்கள் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம் ஆனால் சஹா, ரோஹித் எங்களிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் சென்றனர். டாம் லேதம் தனித்து நிற்கிறார் இன்றைய ஆட்டத்தின் மூலம். அடுத்த டெஸ்ட் போட்டி இந்தூர் என்ற இடத்தில் நடக்கிறது, இதற்கு முன்பாக அங்கு ஆடியதில்லை. அந்தப் பிட்ச் எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பார்ப்போம். கேன் வில்லியம்சன் அடுத்த போட்டிக்காக நாளை வலைப்பயிற்சிக்கு வருவார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x