Published : 10 Aug 2022 07:05 PM
Last Updated : 10 Aug 2022 07:05 PM

‘என்னை விடுவிப்பீர்’ - போல்ட் கோரிக்கையை ஏற்ற நியூஸிலாந்து நிர்வாகம்: குடும்பம், டி20 லீக்... எது காரணம்?

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட்டை முழு நேர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம். இதனை போல்டின் கோரிக்கையை ஏற்று மேற்கொண்டுள்ளது அந்த அணி நிர்வாகம். அவரது இந்த முடிவுக்கு காரணம் குடும்பமா? அல்லது டி20 லீகா? - இது குறித்து பார்ப்போம்.

நியூசிலாந்து அணி நிர்வாகத்துடன் போல்ட் மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே அணி நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு ஒரு காரணமும் உள்ளது. கிரிக்கெட் உலகில் மோஸ்ட் வான்டட் பவுலராக இருப்பவர் போல்ட். இடது கை பவுலர், ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலர் போன்ற தகுதிகளை தன்னகத்தே கொண்டவர்.

போல்ட் ஷாக்: 33 வயதான போல்ட் கடந்த 2011 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுக வீரராக என்ட்ரி கொடுத்தவர். இதுவரை 78 டெஸ்ட், 93 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் களத்தில் 548 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது வயதை ஒப்பிட்டு பார்க்கும் போது எப்படியும் இன்னும் மூன்று ஆண்டுகள் வரையில் அவர் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் தேசிய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலக போல்ட் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பு வரும் நாட்களில் மங்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் பிரதான அணியின் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்குதான் நியூசிலாந்து அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுப்பது வழக்கம்.

“இது மிகவும் ஆழமாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். இதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் கொடுத்துள்ள ஆதரவுக்கு எனது நன்றி. நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது பால்ய கால கனவு. அதனை கடந்த 12 ஆண்டு காலம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி.

இந்த முடிவு எனது மனைவி மற்றும் எனது 3 குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட ஒன்று. எனக்கு எல்லாமே எனது குடும்பம்தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். கிரிக்கெட்டுக்கு பிறகான வாழ்க்கைக்கு எங்களை தயார் செய்து கொள்கிறோம்” என போல்ட் தெரிவித்துள்ளார்.

அவரது ஒப்பந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அவரது ஓய்வு முடிவை சார்ந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

போல்ட் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

அவரது இந்த முடிவை அடுத்து வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் போல்ட் விளையாடுவாரா என்பதுதான் இப்போது பலரது கேள்வியாக உள்ளது. அதற்கு பதில் அளித்துள்ளார் நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி டேவிட் ஒயிட்.

“போல்ட் எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவரது முடிவுக்கான காரணத்தை எங்களிடம் விளக்கினார். இந்த விவகாரத்தில் அவர் நேர்மையானவராக நடந்து கொண்டுள்ளார். அவர் முழு நேர ஒப்பந்தத்தில் இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்புதான். அவருக்கு எங்கள் வாழ்த்துகளும், நன்றியும்.

எதிர்வரும் டி20 கிரிக்கெட்டில் போல்ட் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதற்கு தயாரிப்புகளில் நாங்கள் உள்ளோம். அதே போல் இப்போது நடைபெற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடுவார்” என ஒயிட் தெரிவித்துள்ளார்.

டி20 லீக் காரணமா?

தேசிய அணியுடனான முழு நேர ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதன் மூலம் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் போல்ட் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அதனால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லியுள்ளனர் கிரிக்கெட் விமர்சகர்கள். ஏனெனில் ஒரு வீரர் வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடரில் விளையாட வேண்டுமென்றால் தன் நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டி உள்ளது.

அதே சமயத்தில் ஐபிஎல் லீகிற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து தென்னாப்பிரிக்க டி20 லீக், அமீரக டி20 லீக் போன்றவை உதயமாகி உள்ளனர். இதில் பங்கேற்கும் விதமாக கூட போல்ட் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட் இனி?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர் டேவிட் வார்னர் பிக்பேஷ் லீக் தொடரை காட்டிலும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. குறிப்பாக அமீரக டி20 லீகுடன் அவரது பெயர் அடிபட்டது. அது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் வருத்தம் தெரிவித்திருந்தார். இருந்தாலும் இப்போது வார்னர், பிக்பேஷ் தொடரில் விளையாடுவார் என உறுதிப்படுத்தப்பட்டு வட்டாரங்களில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் டிகாக், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். முழுவதும் ஷார்ட்டர் ஃபார்மெட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உலக அளவில் நடைபெறும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் வீரர்கள் விளையாடி வருவதும்தான் இதற்கெல்லாம் காரணம் என சொல்லப்படுகிறது. உளவியல் ரீதியாக வீரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் இதற்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. இதில் போல்ட் சர்வதேச கிரிக்கெட்டை நாகரீகமான முறையில் கொஞ்சம் Pause செய்து வைத்துள்ளார். வரும் நாட்களில் அவரது பாணியை பலரும் பின்பற்றாமல் இருந்தால் அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு லாபமாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x