Last Updated : 04 Oct, 2016 02:39 PM

 

Published : 04 Oct 2016 02:39 PM
Last Updated : 04 Oct 2016 02:39 PM

நியூஸி. தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ மிரட்டல்: லோதா கமிட்டி விளக்கம்

நிதியளவில் முட்டுக்கட்டை போட்டால் நடப்பு நியூஸிலாந்து தொடரை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பிசிசிஐ கூற, வங்கிக் கணக்குகளை நாங்கள் முடக்கக் கூறவில்லை என்று லோதா கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

பிசிசிஐ கணக்குள்ள வங்கிகள் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரிய தொகைகளை அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினோமே தவிர பிசிசிஐ-யின் வங்கிக் கணக்கை முடக்கவில்லை என்று நீதிபதி லோதா கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மாநில வாரியங்களுக்கு நிதியளிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தி பிசிசிஐ முடிவெடுத்தது. பிசிசிஐ செயல்பாடுகளில், நிர்வாகத்தில் சீர்த்திருத்தங்களை பரிந்துரை செய்த லோதா கமிட்டி அதனை அமல்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவையும் பெற்றது.

ஆனால் பிசிசிஐ இன்னமும் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருவதால் கசப்படைந்த லோதா கமிட்டி பிசிசிஐ கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு, மாநில வாரியங்களுக்கு பெரிய தொகையை கைமாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது. ஏனெனில் அது உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகும் என்று கூறி வங்கிகளை எச்சரித்திருந்தது. இதனையடுத்து பிசிசிஐ கணக்கு வைத்துள்ள எஸ் வங்கி பிசிசிஐ கணக்கை முடக்கியுள்ளதாக செய்திகள் எழுந்தன.

வங்கிக் கணக்குகளை லோதா கமிட்டி முடக்கியதாக கருதிய பிசிசிஐ, நடப்பு நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை ரத்து செய்வதாக அச்சுறுத்தயுள்ளது

இதனையடுத்து விளக்கம் அளித்த லோதா, “பிசிசிஐ கணக்குகளை முடக்கவில்லை. பிசிசிஐ சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது போல் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரிய தொகைகளை அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தோம். தினசரி நடவடிக்கைகள், வழக்கமான செலவுகள், கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும். அதற்கு எந்தவித தடையும் இல்லை” என்றார்.

இது குறித்து லோதா கமிட்டியுடன் தொடர்புடைய நபர் கூறும்போது, “மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரிய தொகைகளை விநியோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு பிசிசிஐ-யிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. பிசிசிஐ கணக்குகளை வங்கிகள் முடக்க முடிவெடுத்தது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் யெஸ் வங்கி அதிகாரிகளிடம் நாங்கள் பேசி கணக்குகளை முடக்குதல் கூடாது என்று அறிவுறுத்தினோம்.” என்றார்.

பிசிசிஐ தனது வங்கிக் கணக்குகளை யெஸ் வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கிகளில் வைத்துள்ளது, இந்த இரு வங்கிகளுக்கும்தான் லோதா குழு மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரிய தொகையினை விநியோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது.

நேற்று (திங்கள்கிழமை) பிசிசிஐ மற்றும் வங்கிகளுக்கு லோதா கமிட்டி அனுப்பிய மின்னஞ்சல் விவரம் வருமாறு:

30, செப்டம்பர் அன்று நடந்த பிசிசிஐ சிறப்புக் கூட்டத்தில் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரிய தொகைகளை அளிப்பது பற்றிய முடிவெடுக்கப்பட்டதாக நாங்கள் அறிகிறோம். 31.8.2016 அன்று இந்த கமிட்டி அறிவுறுத்தியபடி தினசரி விவகாரங்கள் நீங்கலாக நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு இந்த பெரிய தொகைகளை அளிப்பது தினசரி, அத்தியாவசிய செயல்பாடல்ல, அவசரமான விவகாரமும் அல்ல.

மேலும், மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குறித்த காலத்திற்கும் அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக 30.9.2016க்குள் நிதி வழங்கு கொள்கை ஒன்றை உருவாக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இந்நிலையில் பெரிய தொகையினை மாநில கிரிக்கெட் வாரியத்திற்கு அளிப்பதான உங்கள் முடிவு உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பானது. எனவே இந்த வழிகாட்டுதல்களை மீறிய செயல் உச்ச நீதிமன்ற பார்வைக்கு வைக்கப்படும்.

இவ்வாறு கூறியிருந்தது.

மாநில கிரிக்கெட் வாரியங்கள் வேதனை

பிசிசிஐ என்ற தலைமை அமைப்பை நம்பித்தான் மாநில கிரிக்கெட் வாரியங்கள் இயங்குகின்றன, போட்டிகளை ஏற்பாடு செய்யவும் நடத்தவும், ஏன் நடப்பு நியூஸிலாந்து தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கு தயார் செய்யவும் நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் லோதா கமிட்டியின் இத்தகைய உத்தரவு அடுத்த போட்டிகளுக்கான தயாரிப்புகளை முடக்குகிறது என்று வாதிடுகிறது பிசிசிஐ.

“உறுப்பு வாரியங்கள் இதனால் வேதனையடைந்துள்ளன. பிசிசிஐ போட்டிகளை நடத்த அவர்களுக்கு நிதி தேவை. இதுவரை இதனால் 7 மாநில வாரியங்கள் தங்களால் போட்டியை நடத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளன. இது இப்படித்தான் போகும் என்றால் நடப்பு நியூஸிலாந்து தொடரை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.” என்று மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x