

வங்கதேசத்தில் கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் பந்துகள் நல்ல ஸ்விங் ஆனதோடு பந்துகள் நன்றாக எழும்பவும் செய்தன. இது போன்ற ஒரு பிட்சை கடந்த 10 ஆண்டுகளில் துணைக்கண்டங்களில் தான் பார்த்ததில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
2 வது ஒரு நாள் போட்டியில் வங்கதேச இளம் புயல் தஸ்கின் அகமட் 5 விக்கெட்டுகளைச் சாய்க்க இந்தியா 105 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால் ஸ்டூவர்ட் பின்னியின் அசத்தல் பந்து வீச்சில் வங்கதேசம் 58 ரன்களுக்கு மடிந்தது.
நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியிலும் பந்துகள் ஸ்விங் ஆகி, எழும்பி இந்திய பேட்ஸ்மென்களை பாடாய் படுத்தியது. இந்தியா 119 ரன்களையே எடுக்க முடிந்தது.
இந்த நிலையில் பிட்ச் மற்றும் வங்கதேச தொடர் பற்றி ரெய்னா கூறியதாவது:
”துணைக்கண்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய பிட்ச்களை நான் எதிர்கொண்டதில்லை. இத்தகைய பிட்ச்கள் அணிக்கு நல்லது. இந்தப் பிட்ச்களில் ஆடுவது இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா செல்லும் வீரர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். பேட்டிங்கிற்கும் பந்து வீச்சிற்கும் நல்ல போட்டி, இதில் தொடரை வென்றதே முக்கியம்.
பின்னி, மோகித் சிறப்பாக வீசினார்கள், அதே போல் பர்வேஸ் ரசூல், அக்ஷர் படேல் நன்றாகச் செயல்பட்டனர். ஒரு தொடருக்கு வருவதற்கு முன்பாக மனதில் ஒன்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதாவது அனைத்துப் போட்டிகளையும் வெல்வது என்பதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
இதே போன்றுதான் இங்கிலாந்தில் பந்துகள் ஸ்விங் ஆகும், ஆகவே இந்த அணியிலிருந்து இங்கிலாந்துக்கு தேர்வு ஆன வீரர்களுக்கு இந்தத் தொடர் கொடுத்த அனுபவம் நிச்சயம் உதவும்.
இவ்வாறு கூறினார் ரெய்னா.