Published : 07 Aug 2022 12:53 PM
Last Updated : 07 Aug 2022 12:53 PM

‘‘மன்னிப்பு வேண்டாம்; கொண்டாடப்பட வேண்டியது’’ - வெண்கலம் வென்றதற்காக அழுத வீராங்கனைக்கு பிரதமர் ஆறுதல்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீட் கவனம் ஈர்த்துள்ளது.

பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலம் வென்றிருந்தார். பதக்கம் பெற்றாலும் மகிழ்ச்சியடையாத பூஜா, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினார். கண்ணீருடன் பேசிய பூஜா, "அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தங்கம் வென்று இந்த மண்ணில் நம் தேசிய கீதத்தை ஒலிக்கவைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், நடக்கவில்லை. என் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றைச் சரிசெய்வேன்" என்று உருக்கமாக பேசினார்.

பூஜாவை ஆறுதல்படுத்தும் பொருட்டு இந்த வீடியோ பதிவை டேக் செய்த பிரதமர் மோடி, "பூஜா, நீங்கள் வென்றுள்ள பதக்கம் கொண்டாட்டங்களுக்கு உரித்தானது. கொண்டாட்டங்களுக்கு உங்கள் பதக்கம் அழைப்புவிடுக்கிறது அன்றி மன்னிப்பு அல்ல. உங்கள் வாழ்க்கை பயணம் எங்களுக்கெல்லாம் உதேவேகம் கொடுக்கிறது. உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்தில் பெரிய விஷயங்களுக்காக விதிக்கபட்டுள்ளீர்கள் நீங்கள். பிரகாசமாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுவருகிறது.

2019 U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ பிரிவில் வெள்ளி வென்றவர் பூஜா கெலாட். அதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி என்ற சாதனையையும் அவர் படைத்தார். எனினும், அதன்பின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு காமன்வெல்த் தொடரின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். ரீ என்ட்ரியில் வெண்கலப் பதக்கத்துடன் தனது பயணத்தை தொடக்கி இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x