

பர்மிங்கஹம்: காமன்வெல் போட்டியில் கடந்த இரண்டு நாட்களாக மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று மட்டும் மல்யுத்தத்தில் 3 தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் கிடைத்தன.
தொடர்ந்து இன்று மல்யுத்தத்தில் முதல் பதக்கம் பெற்று கொடுத்தார் இந்திய வீராங்கனை பூஜா கேலோத். மகளிர் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ பிரிவில் பூஜா கேலோத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியா, தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் ரவி குமார் 10-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இது மல்யுத்தத்தில் இந்தியா பெறும் நான்காவது தங்கப்பதக்கம் ஆகும்.
மல்யுத்தத்தில் ஐந்தாவது தங்கப்பதக்கம் வினேஷ் போகத் மூலம் கிடைத்தது. மகளிர் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் வினேஷ் போகத். இந்த பிரிவில் மொத்தம் நான்கு வீராங்கனைகளே பங்கேற்றனர். இதனால் ரவுண்டு ராபின் முறை பின்பற்றப்பட்டது. இதில் தான் பங்கேற்ற மூணு போட்டிகளிலும் வென்று தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார் வினேஷ் போகத்.
அதுமட்டுமில்லாமல், வினேஷ் போகத் தான் கடைசியாக பங்கேற்ற மூன்று காமன்வெல்த் தொடரிலும் தங்கப்பதக்கங்கள் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்ற்றுள்ளார்.
இதேபோல், ஆடவர் ஃப்ரீஸ்டைல் 74 கிலோ பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நவீன் பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை 9-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மல்யுத்தத்தில் இது ஆறாவது தங்கப்பதக்கம் ஆகும். அதேநேரம் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 12வது தங்கப் பதக்கம் இதுவாகும்.