Last Updated : 12 Oct, 2016 02:58 PM

 

Published : 12 Oct 2016 02:58 PM
Last Updated : 12 Oct 2016 02:58 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் மீண்டும் முதலிடம்

நியூஸிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியில் 140 ரன்களுக்கு 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்து அஸ்வின் ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூஸி.க்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்தூர் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 3-ம் இடத்தில் இருந்த அஸ்வின் தற்போது முதலிடம் பிடித்தார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெய்ன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி தற்போது டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் குறுகிய காலத்திற்கு அஸ்வின் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் முத்தையா முரளிதரன், கிளென் மெக்ரா, வெர்னன் பிலாண்டர், டேல் ஸ்டெய்ன், ஷான் போலக் ஆகியோருக்குப் பிறகு 900 தரவரிசைப்புள்ளிகள் என்ற சிறந்த தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு தாவியுள்ளார்.

பேட்டிங்கில் இந்தியாவைப் பொறுத்தவரை அஜிங்கிய ரஹானே 6-ம் இடம் பிடித்துள்ளார். அதாவது இந்தூர் டெஸ்டிற்கு முன்னால் 11வது இடத்தில் இருந்தவர் தனது 188 மற்றும் 23 நாட் அவுட் காரணமாக 5 இடங்கள் முன்னேறியுள்ளார். புஜாரா 14-வது இடத்திற்கும் கோலி 16-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x