Published : 04 Aug 2022 09:22 PM
Last Updated : 04 Aug 2022 09:22 PM

“அது கோலியின் முடிவு. அவர் கேப்டனாக இருக்க விரும்பவில்லை” - பிசிசிஐ பொருளாளர்

மும்பை: “கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவு முற்றிலும் கோலியை மட்டுமே சார்ந்தது. அவர் கேப்டனாக இருக்க விரும்பவில்லை” என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் விராட் கோலி. அவரது தலைமையிலான அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை கிரிக்கெட்டின் அசல் வடிவம் என போற்றப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளது. இன்றைய இந்திய அணியின் பாய்ச்சலை புலி பாய்ச்சலாக மாற்றியவர் அவர். இருந்தாலும் ஐசிசி நடத்தும் தொடர்களை அவரது தலைமையிலான அணி வென்றதில்லை என்ற விமர்சனமும் அவர் மீது வைப்பது வழக்கம்.

இத்தகைய சூழலில்தான் கடந்த ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக பகிரங்கமாக அந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அறிவித்திருந்தார் கோலி.

அதன்பிறகு கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் அணியை கேப்டனாக வழிநடத்தி இருந்தார். அதே நேரத்தில் அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்படவில்லை. அதுகுறித்து தனக்கு எதுவும் சொல்லப்படவில்லை என தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பாகவே கோலி சொல்லி இருந்தார். அத்தகைய சூழலில் டெஸ்ட் கிரிக்கட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் விலகினார். இப்போது அணியில் வீரராக மட்டுமே விளையாடி வருகிறார்.

“கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவு முற்றிலும் கோலியை மட்டுமே சார்ந்தது. அவர் கேப்டனாக தொடர விரும்பவில்லை. அவரது எண்ணத்திற்கு நாங்கள் மதிப்பளித்தோம். விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என நம்புகிறோம். நிச்சயம் ஆக்ஷனில் அவர் கலக்குவார்” என அருண் துமால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x