Last Updated : 04 Aug, 2022 06:19 AM

 

Published : 04 Aug 2022 06:19 AM
Last Updated : 04 Aug 2022 06:19 AM

செஸ் ஒலிம்பியாட் | முதல் தோல்வியை சந்தித்தது இந்திய ‘பி’ அணி - மகளிர் பிரிவில் 2 வெற்றி, ஒரு டிரா

இந்திய ஏ அணி வீரர் ஹரிகிருஷ்ணா பென்டலா. படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட்போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய பி அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. ஹரிகிருஷ்ணா பென்டலா, அப்துசட்டோரோவ் நோடிர்பெக்கை தோற்கடித்தார். விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். சசிகிரண், வோகிடோவ் ஷம்சிடினிடம் தோல்வியடைந்தார்.

இந்திய பி அணியானது அர்மேனியாவிடம் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய பி அணி தொடர்ச்சியாக பெற்ற 5 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டி.குகேஷ், சர்கிசியன் கேப்ரியலை தோற்கடித்தார். சரின் நிகல் - மெல்குமியன் ஹிரான்ட் மோதிய ஆட்டம் டிரா ஆனது. அதிபன், டெர்-சஹாக்யன் சாம்வேலிடமும் சத்வானி ரவுனக், ஹோவன்னிசியன் ராபர்ட்டிடமும் தோல்வியடைந்தனர்.

இந்திய சி அணியானது 3-0.5 என்ற புள்ளி கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது. எஸ்.பி சேதுராமன், ஜக்ஸ்டா கரோலிஸையும் அபிஜீத் குப்தா, புல்டினெவிசிஸையும் அபிமன்யு, கசகவுஸ்கி வலேரியையும் தோற்கடித்தனர். கங்குலி சூர்யா சேகர், ஸ்ட்ரேமாவிசியஸுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார்.

மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் ஜார்ஜியாவை தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில் கோனேரு ஹம்பி, ஸாக்னிட்ஸியையும், ஆர்.வைஷாலி, ஜவகிஷ்விலி லேலாவையும் வீழ்த்தினர். ஹரிகா துரோணவல்லி, தானியா சச்தேவ் ஆகியோர் டிரா செய்தனர்.

இந்திய பி அணி, செக். குடியரசுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்றகணக்கில் டிரா செய்தது. வந்திகா அகர்வால், பத்மினி ரவுத், கோம்ஸ்மேரி அன், திவ்யா தேஷ்முக் ஆகிய 4 பேருமே தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர்.

இந்திய சி அணி ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஈஷா கரவாடே, நந்திதா ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர். சாஹிதி வர்ஷினி, மாய் சியிடம் தோல்வியடைந்தார். அதேவேளையில் விஷ்வா வஸ்னாவாலா, நுயன் து கியாங்கை வீழ்த்தினார்.

‘ஆரம்பிக்கலாமா’: இந்திய ஏ மகளிர் அணியின் கோனெரு ஹம்பி கூறும்போது, “அடுத்து வரும் சுற்றுகளில் வலுவான அணிகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். அதில் முக்கியமானது உக்ரைன். தற்போதைக்கு பதக்கத்தை பற்றி சிந்திக்கவில்லை. தொடக்க சுற்றுகள் எனக்கு தடுமாற்றமாகவே இருந்தது. கடந்த இரண்டரை வருடங்களாக நான் கிளாசிக்கல் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்தத் தொடரில் சிறப்பான நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் அதை என்னால் வெற்றியாக மாற்ற முடியாமல் போனது. தற்போது ஜார்ஜியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் நேர்த்தியாக விளையாடியதாக உணர்ந்தேன். எங்கள் அணியின் வெற்றி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். 5 சுற்றுகளில் விளையாடி உள்ள ஹம்பி 2 வெற்றிகளையும், 3 டிராக்களையும் பதிவு செய்துள்ளார்.

350 மாணவர்கள் கண்டுகளிப்பு

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வென்ற மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த வகையில் இதுவரை செஸ் ஒலிம்பியாட் போட்டியை 350 மாணவர்கள் கண்டுகளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x