

பர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் ஜூடோ விளையாட்டு பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
காமன்வெல்த் தொடரின் 6வது நாளான நேற்று ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனையை எதிர்கொண்ட அவர், தோல்வி அடைந்தார். இதனால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆடவர் பளுதூக்குதல் 109+ கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் குர்தீப் சிங் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேபோல், ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவை எதிர்கொண்டார். இதில், சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் வரலாற்றில் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பளுதூக்குதல் 109 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சீங், மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோவும் தூக்கி அவர் வைத்த தேசிய சாதனையை அவரே முறியடித்ததுடன் வெண்கலமும் வென்று அசத்தினார்.
இவர்கள் வென்றதன் மூலம் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களைப் பெற்றுள்ளது.