

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு 12-வது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்குதல் விளையாட்டு பிரிவில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளி வென்றதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.
ஆடவருக்கான 96 கிலோ எடை பிரிவில் அவர் பங்கேற்று விளையாடினார். இதில் ஸ்னாட்ச் முறையில் 155 கிலோ எடையும், க்ளீன் அண்ட் ஜெர்க் முறையில் 191 கிலோ எடையையும் அவர் தூக்கி அசத்தினார். மொத்தம் 346 கிலோ எடையை தூக்கியதன் மூலம் இரண்டாம் இடம் பிடித்தார். அதன் மூலம் வெள்ளி வென்றுள்ளார்.
இது காமன்வெல்த் அரங்கில் அவர் வெல்லும் மூன்றாவது பதக்கம். இதற்கு முன்னர் 2014-இல் வெள்ளி மற்றும் 2018-இல் வெண்கலமும் அவர் வென்றிருந்தார். தீவு தேசமான சமோவா (Samoa) நாட்டை சேர்ந்த Don Opeloge இதே பிரிவில் தங்கம் வென்றுள்ளார். மொத்தம் 381 கிலோ எடையை அவர் தூக்கி இருந்தார்.
இந்தியா மொத்தம் 5 தங்கத்தை இதுவரையில் வென்றுள்ளது. அதோடு 4 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கத்தையும் சேர்த்து 12 பதக்கங்களை இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் வென்றுள்ளனர். இதில் பளுதூக்குதல் விளையாட்டில் மட்டும் இதுவரை 8 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. அதில் 3 தங்கம் அடங்கும்.