

பர்மிங்காம்: ஜூடோ போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் காமன்வெல்த் போட்டித் தொடரில் 9 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் மொரீஷியஸின் பிரிசில்லா மொராண்டை வீழ்த்திய சுஷிலா, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயை எதிர்கொண்டார். போட்டியில் பின்தங்கியதால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். சுஷிலா தேவி, 2014 காமன்வெல்த் தொடரிலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஜூடோவில் இரண்டாவது பதக்கம் விஜய் குமார் யாதவ் மூலம் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் வெண்கல பதக்கம் வென்றார். சைப்ரஸின் பெட்ரோஸ் கிறிஸ்டோடூலிடஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தன்வசத்தப்படுத்தினார்.
சில மணித்துளிகள் முன்பு, பளுதூக்குதலில் மகளிர் 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 93 கிலோ எடை, கிளீன் & ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடை என மொத்தம் 212 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார்.
நேற்றைய தினம் பளுதூக்குதலில் 6 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தது. இன்றைய தினம் பளுதூக்குதலில் ஒரு பதக்கமும், ஜூடோ பிரிவில் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.