Published : 05 Oct 2016 06:41 PM
Last Updated : 05 Oct 2016 06:41 PM

பிசிசிஐ-க்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்: ஈஷான் மானி

ஐசிசி தொடர்களில் லீக் சுற்று ஆட்டங்களில் பாகிஸ்தானுடன் ஆடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் கூறியதையடுத்து முன்னாள் ஐசிசி தலைவர் ஈஷான் மானி கடுமையாக பிசிசிஐ மீது விமர்சனங்களைப் பொழிந்துள்ளார்.

கேப்டவுனில் அடுத்த வாரம் நடைபெறும் ஐசிசி செயற்குழு கூட்டத்தில் எந்த ஒரு ஐசிசி கிரிக்கெட் தொடர்களையும் இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிசிசிஐ-யின் பாகிஸ்தான் குறித்த முதிர்ச்சியற்ற மோசமான கருத்துகளை தெரிவித்ததன் மூலம் இந்தியாவில் ஐசிசி போட்டிகளை நடத்தக்கூடாது என்ற வாதத்திற்கு வலு சேர்ந்துள்ளது என்கிறார் மானி.

மேலும் பிசிசிஐ தலைவரும் ஆளும் பாஜக எம்.பியுமான அனுராக் தாக்கூரை ஐசிசி விளக்கம் கேட்க வேண்டும். ஐசிசி விதிமுறைகளின் படி கிரிக்கெட் ஆட்டத்தின் மதிப்பை குறைக்கும் விதமாக எந்த அதிகாரியும் பேசுதல் கூடாது, எனவே தாக்கூர் எந்த பதவியின் அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பதற்கு விளக்கம் கேட்க வேண்டும் என்கிறார் ஈஷான் மானி.

“ஐசிசி தொடர்களில் லீக் சுற்று நிலையில் பாகிஸ்தான் அணியுடன் ஆடுவது பற்றி இந்தியா இப்போது பேசுகிறது. உண்மையென்னவெனில் இருநாடுகள் மோதும் போட்டிகளில் மிக உயர்ந்த அளவில் ஐசிசி வருவாய் ஈட்டி வருகிறது. இதில் இந்தியா, மூன்று கிரிக்கெட் வாரியங்கள் ஆதிக்கத்தின் கீழ் பெரிய பங்கினை அள்ளிச் செல்கிறது. ஆனாலும் எங்களுடன் இருதரப்பு கிரிக்கெட்டில் ஆடாது. இது என்ன நியாயம்?

இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்காக பிசிசிஐ-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்லிளித்து கொண்டிருக்கிறது, இப்போது தெரிந்துவிட்டது, பிசிசிஐ-யின் முற்றிலும் எதிர்மறையான போக்கு, எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போதாவது விழித்துக் கொண்டு ஐசிசி கூட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை இழுத்து மூட தைரியமாக குரல் கொடுக்க வேண்டும்” என்று பொரிந்து தள்ளினார் ஈஷான் மானி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x