

பர்மிங்காம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஹாக்கி விளையாட்டின் குரூப் சுற்றில் கானாவை 11-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தி உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இதுதான் முதல் போட்டி.
குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இந்தியா, கானாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் பந்தை வலைக்குள் தள்ளுவதில் குறியாக இருந்தனர். அதற்கான உந்துதலுடன் பந்தை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் ஆட்டத்தின் பெரும்பாலான நேரமும் வைத்திருந்தனர். அதன் பலனாக இந்திய அணிக்கு இந்த அற்புத வெற்றி சாத்தியமானது.
அதிகபட்சமாக இந்திய வீரர் ஹர்மன்பிரீத், 3 கோல்களை பதிவு செய்தார். Jugraj சிங், 22 மற்றும் 45-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்திருந்தார். அபிஷேக், ஷம்ஷர், ஆகாஷ்தீப், நீலகண்டா, வருண் மற்றும் மன்தீப் போன்ற வீரர்கள் தலா ஒரு கோல் பதிவு செய்திருந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 3 புள்ளிகள் பெற்று, கோல்கள் அடிப்படையில் குரூப் பிரிவில் இப்போதைக்கு இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக இந்திய அணி நாளை (ஆகஸ்ட் 1) இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் காண்கிறது. இங்கிலாந்து அணி நடப்பு காமன்வெல்த்தில் விளையாடி உள்ள குரூப் சுற்றின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.