Published : 31 Jul 2022 04:15 AM
Last Updated : 31 Jul 2022 04:15 AM
பர்மிங்ஹாம்/புதுடெல்லி: பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்கள் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளியும், குருராஜா வெண்கலமும், மீராபாய் சானு தங்கமும், பிந்த்யாராணி தேவி வெள்ளியும் வென்றதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் போட்டியைத் தொடங்கிவைத்தார். தொடக்க நாளன்று கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெற்றன.
முதல் நாள் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-ம் நாள் போட்டியின்போது இந்தியாவுக்குப் பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது இந்தியா.
ஆடவர் 55 கிலோ எடைப் பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 248 கிலோ (113கி 135கி ) எடை தூக்கி 2-வது இடத்தைப் பிடித்தார்.
இதே பிரிவில், மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதைத் தொடர்ந்து, ஆடவர் 61 கிலோ பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் குருராஜா 3-வது இடம் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
இதே பிரிவில், மலேசியா வீரர் அஸ்னில் பின் பிடின் முகமது முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இரண்டாவது இடத்தை பப்புவா நியூ கினியா வீரர் மொரியா பரு பிடித்து, வெள்ளியைக் கைப்பற்றினார்.
மகளிர் 49 கிலோ எடைப் பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்த இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிர் 55 கிலோ எடைப் பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பிந்த்யாராணி தேவி சொரோகைபம் வெள்ளி வென்றார். மொத்தம் 202 கிலோ எடை தூக்கி 2-வது இடத்தைப் பிடித்தார்.
இந்தியா 2-வது நாளில் 4 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
குவியும் வாழ்த்துகள்
இதற்கிடையில், பளுதூக்குதலில் 4 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் சங்கேத், குருராஜா, மீராபாய் சானு, பிந்த்யாராணி தேவி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பளுதூக்குதல் வீரர் சங்கேத் சர்காரின் சிறப்பான முயற்சி பாராட்டுக்குரியது. காமன்வெல்த் போட்டியில் மதிப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருப்பது, இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துகள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சியாளர்களுக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றிய குருராஜாவுக்குவும், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோரும், பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சங்கேத் காயம்
முன்னதாக, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் இந்திய பளுதூக்குதல் வீரர் சங்கேத் சர்கார், எடையைத் தூக்கியபோது வலது முழங்கையில் காயமடைந்தார். இருந்தபோதும் தொடர்ந்து முயற்சி செய்து, அவர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். போட்டி முடிவடைந்த நிலையில், அவர் பதக்க மேடைக்கு வந்தபோது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்காக கட்டுப் போட்டிருந்தார்.
தொடர்ந்து, அவரை ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இந்திய அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த காமன்வெல்த் சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். எனவே, இந்த ஆண்டும் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீச்சல் போட்டி
இதனிடையே, ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் நீச்சல் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய இளம் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற அரை இறுதிச் சுற்றின்போது அவர் 54:55 விநாடிகளில் கடந்து 4 -வது இடம் பிடித்தார்.
மேலும், பேட்மிண்டன் கலப்பு அணி சுற்றில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்றது. அதேபோல, மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT