

தரம்சலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தியதையடுத்து வேகப் பந்துவீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு தெரிவித்தார்.
தரம்சலா பிட்ச் எப்போதும் வேகப் பந்துவீச்சுக்குச் சாதகமானதாகவே இருந்து வந்துள்ளது. நேற்று குறிப்பாக புதிய பந்தில் ஆஸ்திரேலிய பிட்ச் போல்தான் இருந்தது. அதேபோல் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து மட்டையைக் கடந்து வேகமாகச் சென்றது. நியூஸி. பேட்ஸ்மென்கள் பிட்சை சரியாக கணிக்காமல் தவறாக ஆடினர். முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு தோனி கூறியதாவது:
"வேகப் பந்துவீச்சாளர்களிடமிருந்து அருமையான திறமை வெளிப்பட்டது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் உதவிகரமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
ஹர்திக் பாண்டியா குட் லெந்த்தை நன்றாகப் பயன்படுத்தினார். ஷார்ட் ஆஃப் குட் லெந்த்தையும் நன்றாகப் பயன்படுத்தினார். உமேஷ் சீரான முறையில் வேகமாக வீசி வருபவர். அவரது உடல்தகுதியும் அவருக்கு அருமையாக கைகொடுக்கிறது. ஹர்திக் பந்து வீச்சு பார்ப்பதற்கு ஒன்றாகவும் உண்மையில் வேறு ஒன்றாகவும் உள்ள தன்மை கொண்டது. அவர் 130-132 கிமீ வேகம்தான் வீசுகிறார் என்று தோன்றும் ஆனால் அவர் மணிக்கு 135 கிமீ வேகத்தை சீரான முறையில் கடந்தார். (உண்மையில் 140-143 கிமீ வேகம் வீசினார் ஹர்திக்)
மிஸ்ரா, அக்சர் படேலும் சிறப்பாக வீசினர். ஆனாலும் இவர்கள் பந்து வீச்சில் ரன்கள் அடிக்கப்பட்டது, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லையெனில் இந்தப் பிட்ச் 280-300 ரன்களுக்கான பிட்ச் ஆகும். நடுக்களத்தில் நான் களமிறங்குவது முக்கியம் என்று கருதினேன். நான் அவசரப்படவில்லை. அதிக பந்துகளை நான் ஆடும் போது அது எனக்கு கூடுதல் சாதகம்.
சில வேளைகளில் டாஸ் என்பதும் இந்தத் தொடரில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.
இவ்வாறு கூறினார் தோனி.