செஸ் ஒலிம்பியாட் 2022 | சென்னை வந்த உலக சாம்பியன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக நடப்பு உலக சாம்பியனும், நார்வே நாட்டு வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சென்னை வந்து சேர்ந்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெற்று வருவது செஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் நேற்று சென்னை வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பை ரசிகர்கள் அளித்தனர். செஸ் ரசிகர்கள் பலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து நார்வே நாட்டு செஸ் கூட்டமைப்பினர் அவரை போட்டி நடக்கும் மாமல்லபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் நார்வே அணிக்காக போர்டு நம்பர் 1-ல் விளையாடுவார் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு சென்னையில் 2013-ல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கார்ல்சன் சென்னை வந்திருந்தார். அப்போது விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
