Published : 30 Jul 2022 05:58 AM
Last Updated : 30 Jul 2022 05:58 AM
பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு உற்சாகமாக தொடங்கின. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புடன் உற்சாகமாக விழா தொடங்கியது.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இம்முறை புதிதாக 20 ஓவர் மகளிர் கிரிக்கெட், ஜூடோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, வங்கதேசம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய அணியினர் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்க வேட்டை ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு உற்சாகமாகத் தொடங்கியது. போட்டியை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் முறைப்படி தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
கண்கவர் கலைநிகழ்ச்சி
இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இந்தியாவின் பெயரில் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். முன்னதாக பர்மிங்ஹாம் அலெக்சாண்டர் மைதானத்தில் கண்ணைக்கவரும் கலைநிகழ்ச்சிகள், வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
காமன்வெல்த் விளையாட்டின் டேபிள் டென்னிஸ் மகளிர் அணி பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தியது. லான் பவுல்ஸ் ஆடவர் டிரிப்பிள்ஸ் அணிப் பிரிவில் இந்தியா 6-23 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியிடம் வீழ்ந்தது.
சிவதாபா முன்னேற்றம்
ஆடவர் குத்துச்சண்டைப் போட்டியில் (63.5 கிலோ பிரிவு) இந்திய வீரர் சிவதாபா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரர் சுலைமான் பலோச்சாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் நீச்சல் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் முன்னேறினார். நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் 53.77 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அரை இறுதிச் சுற்றில் இடம்பிடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT