Published : 16 Oct 2016 06:05 PM
Last Updated : 16 Oct 2016 06:05 PM

சரிவிலிருந்து நியூஸி.யை மீட்ட லேதம், சவுதி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 191 ரன்கள்

தரம்சலாவில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டு 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தரம்சலா பிட்ச் ஆஸ்திரேலிய பிட்ச் போன்று பவுன்ஸ் இருந்தது, புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆனது, இதனால் அறிமுக ஒருநாள் போட்டியிலேயே ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஆச்சரியகரமான பந்து வீச்சு மாற்றத்தில் கேதர் ஜாதவ் முதல் முறையாக ஆஃப் ஸ்பின் வீசி அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த நியூஸிலாந்து அணி 65/7 என்று சரிவு கண்டது. ஹர்திக் பாண்டியா நல்ல வேகத்தில் வீசினார்.

ஆனால் தொடக்க வீரர் லேதம் ஒரு முனையில் அபாரமாக அரைசதம் எடுத்து 79 ரன்களுடன் தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை படைக்க, டிம் சவுதி 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 பெரிய சிக்சர்களுடன் 55 ரன்கள் விளாச ஸ்கோர் 190 ரன்களை எட்டியது. லாதம் ஒருநாள் போட்டிகளில் தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆனாலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வகையில் 10-வது வீரராவார். 9-வது விக்கெட்டுக்காக 58 பந்துகளில் 71 ரன்கள் சேர்க்கப்பட்டது.

முதலில் அருமையாக 2 கேட்ச்களை மிட் ஆனில் பிடித்த உமேஷ் யாதவ் சவுதி இறங்கியவுடன் கொடுத்த எளிமையான வாய்ப்பை பைன்லெக்கில் கோட்டை விட்டார். அதிர்ஷ்டமில்லாத அந்த பவுலர் ஜஸ்பிரித் பும்ரா. இல்லையெனில் நியூசிலாந்து 120 ரன்களுக்கு ஆட்டமிழக்க வாய்ப்பிருந்தது. ஆனால் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி அதிரடி ஆட்டம் ஆடினார் சவுதி. கேட்சை விட்ட அதே ஓவரில் பும்ராவை 2 பவுண்டரிகள் விளாசினார்.

முன்னதாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அவருக்கு அறிமுக தொப்பியை கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் வழங்கினார். வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா களமிறக்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளராக அக்ஷர் படேல் இடம் பெற்றார்.

இதையடுத்து நியூஸிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்தில், டாம் லதாம் களமிறங்கினர். தொடக்க ஓவர்களை உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா வீசினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.

பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டிய குப்தில் கடைசி பந்தில், ஸ்லிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குப்பில் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ராஸ் டெய்லர் சந்தித்த முதல் பந்திலேயே தோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்த விக்கெட்டையும் உமேஷ் யாதவே கைப்பற்றினார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அதிரடி வீரர் கோரி ஆண்டர்சனை 4 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த விக்கெட் கீப்பர் லூக் ரோங்கியை ரன் எதும் எடுக்காத நிலையிலும் வெளியேற்றினார் பாண்டியா.

12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணி தத்தளித்தது. 19-வது ஓவரை வீசிய பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் இரு விக்கெட்களை வீழ்த்தி நியூஸிலாந்து அணிக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்தில் நீஷாம் 10, மிட்செல் சாண்ட்னர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹாட்ரிக் வாய்ப்பை பெற்றார், ஆனல் ஹேட்ரிக் லபிக்கவில்லை.

டக்கி பிரேஸ்வெல், சவுதி, சோதி ஆகியோரை மிஸ்ரா வீழ்த்தி 8.5 ஓவர்களில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பும்ரா 8 ஓவர்களில் 29 ரன்களையே விட்டுக் கொடுத்தார். உமேஷ் கைங்கரியத்தில் இவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்காமல் போனது. 44வது ஓவரில் நியூஸிலாந்து 190 ரன்களுக்குச் சுருண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x