IND vs WI | ரோகித் & டிகே விளாசல்; இந்தியா 190 ரன்கள் குவிப்பு 

IND vs WI | ரோகித் & டிகே விளாசல்; இந்தியா 190 ரன்கள் குவிப்பு 
Updated on
1 min read

தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்து அசத்தினார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவர்களில் அதிரடியாக பேட் செய்து மாஸ் காட்டினார்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. இந்நிலையில், இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

தரூபா பகுதியில் பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் இரு அணிகளும் இன்று முதல் டி20 போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து இந்திய அணி பேட் செய்தது.

இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். முதல் விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரிஷப் பந்த், 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்திக், 1 ரன் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் நிலைத்து ஆடிய ரோகித், 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

ஜடேஜா, 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து அஸ்வின் உடன் இணைந்து விளையாடினார் தினேஷ் கார்த்திக். 19 பந்துகளில் 41 ரன்களை சேர்த்து அசத்தினார் டிகே. 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 215.79. அஸ்வின் உடன் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார் டிகே.

அதன் பலனாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் சார்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மெக்காய், ஹோல்டர் மற்றும் ஹுசைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த அணி விரட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in