

பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இணையலாம் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைவர் ஜோன் லபோர்டா (Joan Laporta). அதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரும் மூச்சும் போல பார்சிலோனா அணியும் மெஸ்ஸியும். அவர் அர்ஜென்டினா நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும் பார்சிலோனா அணிக்காக விளையாடுவதை பெரும்பாலான ரசிகர்கள் நாடுகளை கடந்து ரசிப்பது வழக்கம். மெஸ்ஸிக்கும் பார்சிலோனாவுக்கும் இடையேயான பந்தம் சுமார் 21 ஆண்டு காலம் நீடித்தது.
மெஸ்ஸி பதின்ம வயதை எட்டியதும் தொடங்கிய பந்தம் அது. சரியாக தனது 13-வது வயதில் பார்சிலோனா கிளப் அணியில் மெஸ்ஸி இணைந்தார். அன்று தொடங்கிய பயணம் ஜுனியர், பார்சிலோனா சி, பார்சிலோனா பி மற்றும் பார்சிலோனா சீனியர் என தொடர்ந்தது. சிறு வயதில் மெஸ்ஸி எதிர்கொண்ட வளர்ச்சி குறைபாடுக்கு தேவையான சிகிச்சைகளை கவனித்துக் கொண்டதும் அந்த அணி தான்.
அந்த அணிக்காக 520 போட்டிகள் விளையாடி 474 கோல்கள் (சீனியர் அணி) ஸ்கோர் செய்துள்ளார் மெஸ்ஸி. அவரது அசாத்திய ஆட்டத்தை கண்டு பிரசித்தி பெற்ற பல கால்பந்தாட்ட கிளப் அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய முயன்றன. ஆனால் அதை மெஸ்ஸி பலமுறை மறுத்துள்ளார்.
அத்தகைய சூழலில்தான் மெஸ்ஸிக்கு வழங்கப்படும் ஊதியத்தை நிதி சுமையை காரணம் காட்டி 2021-22 ஒப்பந்தத்தைத் தொடர முடியாது என பார்சிலோனா தெரிவித்தது. முன்னதாக 2020 காலகட்டத்தில் பார்சிலோனாவை விட்டு விலக உள்ளதாக மெஸ்ஸி அறிவித்தார்.
இப்போது அவர் PSG கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான் பார்சிலோனா அணியின் தலைவர் ஜோன் லபோர்டா ‘மீண்டும் மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக விளையாடுவார்’ என தெரிவித்துள்ளார்.
“நான் மெஸ்ஸிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பார்சிலோனாவுடன் அவரது ஓய்வு தருணம் அரங்கேற வேண்டும் என நான் விரும்புகிறேன். அதை சாத்தியம் ஆக்க முடியும் என நினைக்கிறேன். அதுதான் எங்களின் விருப்பம். அதில் நாங்கள் உறுதியாகி உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மெஸ்ஸிக்கு 35 வயதாகிறது. அவர் PSG அணியுடன் இரண்டு ஆண்டு காலம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். வரும் 2023 ஜூனில்தான் அந்த ஒப்பந்தம் முடியும். அதன் பிறகே மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக ஜோன் லபோர்டா சொல்வது போல மீண்டும் விளையாட முடியும்.
ஆனால் மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார் பார்சிலோனாவின் மேனேஜர் சேவி.