CWG 2022 | ஸ்டம்பிங்கில் இருந்து ஷஃபாலி தப்பியது எப்படி? - ஓர் அரிய ‘சம்பவம்’
எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா க்ரீஸிலிருந்து வெளியேறிய நிலையில் ஸ்டம்பிங் வாய்ப்பில் இருந்து தப்பியது எப்படி என்பதைப் பார்ப்போம். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மகளிர் அணிகள் குரூப் சுற்றுப் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில் இந்திய 20 ஓவர்கள் பேட் செய்து 154 ரன்களை குவித்துள்ளது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தள்ளாட்டத்துடன் சேஸ் செய்தது ஆஸ்திரேலிய அணி.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்காட்ட வீராங்கனையான ஷஃபாலி வர்மா சில அடி தூரம் க்ரீஸிலிருந்து வெளியேறிய நிலையில் ஸ்டம்பிங் வாய்ப்பிலிருந்து தப்பித்துள்ளார். முதல் இன்னிங்ஸின் 9-வது ஓவரை ஆஸ்திரேலிய வீராங்கனை தாஹிலா மெக்ரத் வீசி உள்ளார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை கொஞ்சம் வைடு ஆக வீசியிருந்தார் மெக்ரத். அதனை இறங்கி வந்து அடிக்க முயன்று பந்தை ஷஃபாலி மிஸ் செய்திருப்பார்.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே பந்தை பிடித்திருப்பார். நொடி பொழுதில் தனது வலது கையால் ஸ்டம்பையும் தகர்த்தார். ஆனால் அவர் ஸ்டம்பை தகர்த்த போது பந்து அவரின் இடது கையில் இருந்தது. இது டிவி அம்பயரின் ரிவ்யூவில் தெளிவாக தெரிந்தது. கிரிக்கெட் விதிகளின் படி ஸ்டம்பை தகர்க்கும் போது பந்து கையில் இருக்க வேண்டும். அதனால் ஷஃபாலி அவுட்டாகாமல் தப்பினார்.
அப்போது 34 ரன்கள் எடுத்திருந்தார் அவர். மேற்கொண்டு 14 ரன்கள் சேர்த்து அவுட்டானார் அவர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருப்பினும் ஆஷ்லே கார்ட்னர் மற்றும் கிரேஸ் ஹாரிஸின் அதிரடி ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. இதில் ஆஷ்லே கார்ட்னர் 35 பந்துகளில் 52 ரன்களை சேர்த்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
