உலகக் கோப்பையை தக்கவைத்தது இத்தாலி

உலகக் கோப்பையை தக்கவைத்தது இத்தாலி
Updated on
2 min read

3-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1938-ம் ஆண்டு ஜூன் 4 முதல் 19 வரை பிரான்ஸில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பா கண்டத்துக்கு வழங்கியதால் கோபமடைந்த தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும், ஆர்ஜென்டீனாவும் போட்டியை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக ஸ்பெயின் அணி பங்கேற்கவில்லை.

நடப்பு சாம்பியன் இத்தாலிக்கும், போட்டியை நடத்திய பிரான்ஸுக்கும் நேரடித்தகுதி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 14 அணிகளில் ஐரோப்பாவில் இருந்து 11 அணிகளும், அமெரிக்க கண்டத்திலிருந்து பிரேசில், கியூபா அணிகளும், ஆசிய கண்டத்தில் இருந்து டச் ஈஸ்ட் இண்டிஸும் (தற்போதைய இந்தோனேசியா) பங்கேற்றன. உலகக் கோப்பை வரலாற்றில் ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் இருந்து குறைவான அணிகள் பங்கேற்ற போட்டி இதுதான்.

ஆஸ்திரியா விலகல்

ஆஸ்திரியா, உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தபோதிலும், ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகியது. ஆஸ்திரிய வீரர்கள் சிலர் ஜெர்மனிக்காக உலகக் கோப்பையில் விளையாடினர். ஆனால் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான மத்தியாஸ் சைன்டீலர் ஒன்றிணைந்த (ஜெர்மனி, ஆஸ்திரியா) அணிக்காக விளையாட மறுத்துவிட்டார்.

ஆஸ்திரியா பங்கேற்காததால், முதல் போட்டியில் அந்த அணியை எதிர்த்து விளையாடவிருந்த ஸ்வீடன் முதல் சுற்றில் விளையாடாமலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 1938 உலகக் கோப்பையில் விளையாடிய கியூபா, டச் ஈஸ்ட் இண்டிஸ் அணிகள் அதன்பிறகு தற்போது வரை உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை. 1938 உலகக் கோப்பையில் முதல்முறையாக போலந்து, நார்வே அணிகள் ஆடின. அதன்பிறகு 1994 வரை நார்வேயும், 1974 வரை நெதர்லாந்தும் உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை.

முந்தைய உலகக் கோப்பையைப் போன்றே இந்தப் போட்டியும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில் ஹங்கேரி, ஸ்வீடன், பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் ஹங்கேரி 5-1 என்ற கோல் கணக்கல் ஸ்வீடனை தோற்கடித்து சாம்பியன் ஆனது.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில பிரேசிலை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. இத்தாலியை வீழ்த்திவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பிரேசில் பயிற்சியாளர், அரையிறுதியில் அதன் முன்னணி வீரர் லியோனிடாஸுக்கு ஓய்வு கொடுத்ததும் அதன் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. பிரேசில் அணி 3-வது இடத்தையும், ஸ்வீடன் அணி 4-வது இடத்தையும் பிடிக்க, இறுதிப்போட்டியில் இத்தாலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்றது.

16 ஆண்டுகள் நடப்பு சாம்பியன்

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1950-ல் மீண்டும் உலகக் கோப்பை நடத்தப்பட்டது. இதனால் 1934, 1938-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற இத்தாலி அணி தொடர்ந்து 16 ஆண்டுகள் உலக சாம்பியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குத் தெரியுமா?

1938 உலகக் கோப்பை போட்டியில்தான் போட்டியை நடத்திய பிரான்ஸும், நடப்பு சாம்பியனான இத்தாலியும் தகுதிச்சுற்றில் விளையாடாமல் பிரதான சுற்றுக்கு நேரடித்தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் அணிக்கும், நடப்பு சாம்பியனுக்கும் நேரடித்தகுதி வழங்குவது 1938-ல் தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்தும் அணிக்கு இன்றளவிலும் நேரடித்தகுதி வழங்கப்பட்டாலும், நடப்பு சாம்பியனுக்கு நேரடித்தகுதி வழங்கும் நடைமுறை 2006 உலகக் கோப்பையோடு கைவிடப்பட்டது.

பை-சைக்கிள் 'கிக்'கால் புகழ் பெற்றவர்

1938 உலகக் கோப்பையில் பெரிதும் பேசப்பட்டவர் பிரேசில் வீரர் லியோனிடாஸ் டா சில்வாதான். அந்த உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்த அவர், போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்து தனது அணிக்கு 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி தேடித்தந்தார்.

பிரேசிலுக்காக 23 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர், தலைசிறந்த ஸ்டிரைக்கராக திகழ்ந்ததோடு, தனது பை-சைக்கிள் கிக்கால் (தற்போது சிசர் கட் அல்லது ஓவர் ஹெட் கிக் என அழைக்கப்படுகிறது) உலக அளவில் பிரபலமடைந்தார்.

கறுப்பு வைரம் அல்லது ரப்பர் மேன் என்றழைக்கப்பட்ட லியோனிடாஸ், ரியோ அணிக்காக கால்பந்து விளையாடத் தொடங்கினாலும், சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது உருகுவே அணிக்காக விளையாடினார். அவர் முதல் ஆட்டத்திலேயே இரு கோல்களை அடித்தார். அடுத்த ஓர் ஆண்டில் பிரேசில் அணிக்கு தாவிய அவர், பிரேசில் கால்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தார்

1938 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்

மொத்த ஆட்டங்கள் - 18

மொத்த கோல்கள் - 84

ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4.67

ரெட் கார்டு - 4

ஓன் கோல் - 1

மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 4,83,000

டாப் ஸ்கோர்

லியோனிடாஸ் (பிரேசில்) - 7 கோல்கள்

ஜியூலா ஸென்கெல்லர் (ஹங்கேரி) - 6 கோல்கள்

சில்வியோ பயோலா (இத்தாலி) - 5 கோல்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in