Published : 28 Jul 2022 07:03 PM
Last Updated : 28 Jul 2022 07:03 PM

4 முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற செபாஸ்டியன் வெட்டல் ஓய்வு அறிவிப்பு

செபாஸ்டியன் வெட்டல்.

பெர்லின்: தொடர்ந்து நான்கு முறை ஃபார்முலா 1 ரேஸில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் செபாஸ்டியன் வெட்டல். நடப்பு 2022 சீசன் நிறைவடைந்ததும் ஃபார்முலா 1-இல் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் 35 வயதான செபாஸ்டியன் வெட்டல். ஃபார்முலா 1 கார்பந்தய விளையாட்டில் பங்கேற்கும் பிரபல கார் ஓட்டிகளில் ஒருவராக அறியப்படுகிறார். 2010, 2011, 2012 மற்றும் 2013 என தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் வெட்டல்.

“நான் 2022 சீசனோடு ஃபார்முலா 1 விளையாட்டில் இருந்து விடை பெறுகிறேன். இந்நேரத்தில் இந்த பயணத்தில் எனக்கு பக்க பலமாக இருந்த நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நான் ஓய்வு பெறுவதற்கான காரணத்தை விவரிப்பது முக்கியம் என கருதுகிறேன்.

நான் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். என் வாழ்வில் இரண்டற கலந்தது இந்த விளையாட்டு. எனது வாழ்க்கை டிராக்கிற்கு உள்ளே எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவிற்கு அதற்கு வெளியிலும் உள்ளது. மூன்று குழந்தைகளின் தந்தை நான். அற்புதமான பெண்ணின் கணவன். எனக்கு சாக்லேட் பிடிக்கும். இயற்கையை நேசிக்கிறேன். எனது பெஸ்ட் ரேஸ் வரும் நாட்களில் வரவுள்ளது. அதை வெல்வேன் என நான் நம்புகிறேன்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் செபாஸ்டியன். இதுதான் அவரது முதல் இன்ஸ்டாகிராம் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x