Last Updated : 28 Jul, 2022 03:26 PM

 

Published : 28 Jul 2022 03:26 PM
Last Updated : 28 Jul 2022 03:26 PM

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம் - 187 நாடுகள் பங்கேற்பு; 6 அணிகளை களமிறக்கும் இந்தியா

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட்போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு முறைப்படி போட்டிகளை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து நாளை (29-ம் தேதி) முதல் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 பேர் கலந்து கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தத் தொடரை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறை. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றன. பெண்கள்பிரிவில் 162 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதன் மூலம் அதிக அணிகள் கலந்து கொள்ளும் தொடராக இது அமைந்துள்ளது. இந்த வகையில் 2018-ம் ஆண்டு ஜார்ஜியாவின் பதுமியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் 180 நாடுகள் பங்கேற்றிருந்தன.

செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, சீனா இம்முறை பங்கேற்கவில்லை. அதேவேளையில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் என மொத்தம் 6 அணிகளில் 30 பேர் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இருப்பார்கள், அதில் 4 பேர் ஒவ்வொரு சுற்றிலும் களமிறங்குவார்கள். அணியின் கேப்டன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விளையாடாதவராக இருப்பார். இருப்பினும் அணியின் அமைப்பை அவரே தீர்மானிப்பார்.

ஒலிம்பியாட் 11 சுற்றுகளை கொண்ட சுவிஸ் லீக் வடிவத்தில் நடத்தப்படுகிறது. போட்டியை நடத்தும் நாடுகள் இரண்டு அணிகளை களமிறக்க முடியும். ஆனால் இந்தியா இரண்டு பிரிவுகளிலும் தலா ஒரு கூடுதல் அணியை களமிறக்குகிறது. ஏனெனில் மொத்த அணிகளின் எண்ணிக்கைஒற்றைப்படையாக அமைந்துள்ளது.

முதல் சுற்று போட்டிகள் நாளை (29-ம் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி ஓய்வு நாளாகும். 9-ம் தேதி கடைசி சுற்று நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் (10-ம் தேதி) இந்தத் தொடரில் கலந்து கொண்ட வெளிநாட்டு அணிகள் புறப்பட்டுச் செல்லும்.. போட்டிகள் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும்.

ஒலிம்பியாட் செயல்திறன் அடிப்படையில் குழுமற்றும் தனிநபர் பரிசுகளைக் கொண்டுள்ளது. அதேவேளையில் பரிசுத்தொகை வழங்கப்படாது. ஓபன் பிரிவில் சாம்பியனுக்கு ஹாமில்டன் ரஸ்ஸல்கோப்பையும், மகளிர் பிரிவில் வெரா மென்சிக் கோப்பையும் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த கிளாஸிபிகேஷன் பிரிவில் நோனா கேப்ரின்டாஷ்விலி கோப்பை தரப்படும். முதல் 3 இடங்களை பெறும் அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். மேலும் தனிநபர் பிரிவில் வீரர்களின் ரேட்டிங்குக்கு ஏற்ப பதக்கங்கள் வழங்கப்படும்.

ஓபன் பிரிவில் பங்கேற்கும் இந்திய ஏ அணியில் விதித் குஜ்ராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல். நாராயண் மற்றும் சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். போட்டித் தரவரிசையில் இந்திய ஏ அணிக்கு 2-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. ஓபன் பிரிவில் கலந்து கொள்ளும் இந்திய ‘பி’ அணியில் நிஹால் சரின், டி.குகேஷ், பி.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா மற்றும் ரவுனக் சத்வானி இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு போட்டித் தரவரிசையில் 11-வது இடம் பிடித்துள்ளது.

ஓபன் பிரிவில் கலந்து கொள்ளும் இந்திய ‘சி’ அணியில் சூர்யா சேகர் கங்குலி, எஸ்.பி. சேதுராமன், அபிஜீத் குப்தா, கார்த்திகேயன் முரளி மற்றும் அபிமன்யு பூரணிக் ஆகியோர் உள்ளனர். இந்த அணி போட்டித் தரவரிசையில் 17-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபன் பிரிவில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் உள்ள 15 வீரர்களுமே கிராண்ட் மாஸ்டர்கள் என்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

மகளிர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணியில் கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, தானியா சச்தேவ் பக்தி குல்கர்னி ஆகியோரும் ‘பி’ அணியில் வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரவுத், திவ்யா தேஷ்முக் ஆகியோரும் ‘சி’ அணியில் ஈஷா கரவாடே, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போத்தா, நந்திதா பிவி மற்றும் விஷ்வா வஸ்னாவாலா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். மகளிர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணிக்கு போட்டித் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

‘பி’ அணிக்கு 11-வது இடமும், ‘சி’ அணிக்கு 16-வது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணிகளுக்கு 5 முறை உலகசாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வழிகாட்டியாகவும், மூன்றாவது கிராண்ட்மாஸ்டர் பிரவீன் திப்ஸே குழுவின் தலைவராகவும் செயல்படுகின்றனர்.

ஓபன் பிரிவில் இந்திய ஏ அணிக்கு ஃபேபியோ கருனா, வெஸ்லி சோ, லெவோன் அரோனியன், சாம் ஷாங்க்லாண்ட், லீனியர் டொமினிகுஸ் ஆகிய நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய அமெரிக்கா கடும் சவால் தரக்கூடிய அணியாக பார்க்கப்படுகிறது. இந்த அணியின் சராசரி இஎல்ஓ ரேட்டிங் 2,771 ஆக உள்ளது. நார்வே, அஜர்பைஜான் அணிகளும் பதக்கங்களை வெல்லக்கூடிய வலுவான அணிகளாகவே திகழ்கின்றன.

அதேவேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய பி அணி மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆர்.பி.ரமேஷ் பயிற்சியாளராக உள்ள இந்த அணியில்தான் பிரக்ஞானந்தா இடம் பெற்றுள்ளார்.

மகளிர் பிரிவில் இந்தியா 'ஏ' அணி போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது. தரவரிசையில் அனுபவம் வாய்ந்த கோனேரு
ஹம்பி, ஹரிகா உள்ளடக்கிய இந்த அணி தங்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் வேகமாக முன்னேறும் ஆர்வைஷாலி மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.

உக்ரைன், ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகள் இந்திய ஏ அணிக்கு சவால் தரக்கூடும். இந்த அணிகள் போட்டித் தரவரிசையில் முறையே இரண்டாவது முதல் நான்காவது இடத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x