Published : 28 Jul 2022 03:05 PM
Last Updated : 28 Jul 2022 03:05 PM

2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை: போட்டியின் முக்கிய அம்சங்கள்

கொழும்பு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணி.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடும் நோக்கில் தீவு தேசமான இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரின் முதல் போட்டியை பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம். இல்லையென்றால் தொடரை இழக்கும் நிலை இருந்தது. இத்தகைய சூழலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து பாகிஸ்தான் அணி 231 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

147 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இலங்கை அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன் தனஞ்ஜெய டி சில்வா சதம் விளாசினார். அதன் பலனாக இரண்டாவது இன்னிங்ஸில் 360 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற வலுவான முன்னிலை காரணமாக 508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பாகிஸ்தான்.

இருப்பினும் அந்த முயற்சியில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான். இரண்டாவது இன்னிங்ஸில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. அதனால் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் தொடரையும் சமன் செய்துள்ளது.

இந்தப் போட்டி இலங்கை அணியின் சீனியர் வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸின் 100-வது டெஸ்ட் போட்டியாகும். சிறப்புமிக்க இந்தப் போட்டியில்தான் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. அதே போல அந்த அணி அடுத்தடுத்து இரண்டு தொடர்களை சமன் செய்துள்ளது. இரண்டு தொடரிலும் கடைசி போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது அந்த அணி. இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் மறுசீரமைப்பை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x